DO III Past Paper

Thursday, September 2, 2021

தாபன விதிக்கோவை வினாவிடைகள் 09 - கடிதங்கள் Establishment Code Question and Answer - Letters



தாபன விதிக்கோவை வினாவிடைகள் தொடர் 09

நீதிமன்ற ஆவணமொன்று Court Document அல்லது உறுதியொன்று போன்ற ஏனைய முக்கிய ஆவணங்களை உள்ளடக்கிய அனைத்து பொதிகளும் தபாலில் அனுப்பப்படுமிடத்து எவ்வாறு அனுப்பப்படுதல் வேண்டும்?

 

பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

 

கடிதமொன்றில் கையொப்பமிடுபவர் யாராகவிருப்பினும் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுகின்ற ஒவ்வொரு கடிதத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் யார் பெறுப்பாளராதல் வேண்டும்?

திணைக்களத் தலைவர் 

 

அந்தரங்கக் கடிதங்களையும் ஆவணங்களையும் தபாலில் அனுப்புதல் தொடர்பாக எடுக்கப்பட நடைமுறைகளை குறிப்பிடுக.

 

அ) அந்தரங்கக் கடிதங்களையும் ஆவணங்களையும் கடித உறையொன்றில் இட்டு அக்கடித உறையை மற்றொரு கடித உறைக்குள் இடல் வேண்டும். 

ஆ) உள்ளுறையில் “இரகசியமானது” என குறியீடிடல் வேண்டும். எனினும் வெளியுறையை அவ்வாறு குறியீடிடக் கூடாது. 

இ) உள்ளுறையை வெளியுறையை விட சிறிதாக இருக்குமாறு மடித்தல் வேண்டும்.

இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

“இரகசியமானது” என குறிப்பிடப்பட்டு கிடைக்கப்பெறுகின்ற கடிதங்கள் தொடர்பாக ஒரு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகளை குறிப்பிடுக.

 

அ) “இரகசியமானது” என குறிப்பிடப்பட்டு கிடைக்கப்பெறுகின்ற எல்லாக் கடிதங்களும் திறக்கப்பட வேண்டியது, திணைக்களத் தலைவரினாலோ அல்லது அதற்கென அவரால் விசேடமாக அதிகாரம் அளிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவரினாலோ ஆகும்.

ஆ) அலுவலகத்தின் அனைத்து இரகசிய நடவடிக்கைகள் தொடர்பாக செயல்பட எல்லா அலுவலகங்களிலும் பொதுவாக ஓர் அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

இ) அந்தரங்க ஆவணங்களில் அடங்கியுள்ள விடயங்களை அவற்றை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் தவிர்ந்த வேறெவரும் அறிந்து கொள்ள முடியாதென்பதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

ஈ) திறந்த ஆவணங்களில் இரகசியக் கடிதங்கள் பற்றிய குறிப்பீடு எதுவும் செய்யப்படுதலாகாது.

பொதுமக்களிடமிருந்து அல்லது வேறோர் அரசாங்கத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற கடிதங்களுக்கு பதில் அனுப்புவது தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறிப்பிடுக.

 

அ) பொதுமக்களிடமிருந்து அல்லது வேறோர் அரசாங்கத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற கடிதங்களுக்கு உடனடியாக பதில் அனுப்பப்பட வேண்டும். 

ஆ) கடிதமொன்று கிடைக்கப்பெற்று ஒரு வாரத்திற்குள் இறுதியான பதிலை அனுப்பி வைக்க முடியாதவிடத்து இடைக்காலப் பதில் ஒன்றை பொதுப் படிவம் 108ல் அனுப்பி வைத்தல் வேண்டும்.

இ) மேலும் தாமதம் ஏற்படுமாயின் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றதென்பதையும் இறுதியான பதிலொன்றை எப்போது எதிர்பார்க்கலாமென்பதையும் குறிப்பிட்டு காலத்துக்குக் காலம் இடைக்கால பதில்கள் அடிக்கடி அனுப்பப்பட்டு வரலும் வேண்டும்.

 

கடமை ரீதியான கடிதங்களினதும் அலுவலக ரீதியான ஆவணங்களினதும் பிரதிகளை எடுத்தலும் விநியோகித்தலும் தொடர்பாக தாபன விதிக்கோவை அத்தியாயம் XXVIII இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை குறிப்பிடுக.

 

1) தான் சம்பந்தப்பட்ட கடிதமொன்றின் அல்லது வேறேதும் பிரபல்யப்படுத்த முடியாத அலுவலக முறையான ஆவணமொன்றின் பிரதியொன்றை தனது பயன்பாட்டிற்காக உத்தியோகத்தரொருவர் எடுக்க முடியாது.

2) அரசாங்கத்தின் ஒரு திணைக்களத்திலிருந்து இன்னொரு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றின் பிரதியொன்றை பின்னைய திணைக்களம் எந்தவொரு தனிப்பட்டவருக்கும் பொதுவாக விநியோகிக்கக்கூடாது. 

3) நீதிமன்றத்தின் கட்டளையொன்றின் மீது மற்றும் உரிய பிரதி பண்ணல் கட்டணத்தைச் செலுத்திய விடத்தே ஒழிய, கடிதம் எழுதியவர் தவிர்ந்த வேறெவரேனும் ஒருவருக்கு சான்றுறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தின் பிரதியையோ அல்லது அதற்கான பதிலையோ வழங்கலாகாது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களது தனிப்பட்ட உரிமையை நேரடியாகப் பாதிக்கின்ற எந்த விடயம் பற்றியும் முறையாக அமைக்கப்பட்ட எந்தவோர் அதிகார சபைக்கும் விண்ணப்பமொன்றையோ அல்லது மேன்முறையீடொன்றையோ சமர்ப்பிக்க முடியுமா?

 

1) சமர்ப்பிக்க முடியும். அத்தகைய ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அல்லது மேன்முறையீட்டையும் மேலிடத்துக்கு அனுப்பி வைக்க அவரது மேலதிகாரி கடமைப்பட்டுள்ளார்.

2) அத்தகைய விண்ணப்பம் அல்லது மேன்முறையீடு நாகரிகமற்ற, முறையற்ற அல்லது அவமதிப்பான வசன நடைசார்ந்த மொழியாயிருப்பின் அது அனுப்பப்படலாகாது.

3) அவ்விண்ணப்பம் அல்லது மேன்முறையீடு கையேற்கப்பட்டால், அது கிடைக்கப்பெற்றமை பற்றி உடனடியாக அறிவித்து அது போய்ச் சேர வேண்டிய ஆளுக்கு சமர்ப்பிக்கப்படுமென உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.

 

தனிப்பட்ட உரிமையை நேரடியாகப் பாதிக்கின்ற எந்த விடயம் பற்றியும் முறையாக அமைக்கப்பட்ட எந்தவோர் அதிகார சபைக்கு உத்தியோகத்தர் விண்ணப்பம் அல்லது மேன்முறையீடு சமர்ப்பிக்கப்படும் விதிமுறைகளை குறிப்பிடுக. 

 

அ) விண்ணப்பமொன்று அல்லது மேன்முறையீடொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டியது விண்ணப்பதாரியின் திணைக்களத் தலைவரின் மூலமாகும்.

ஆ) முன்னாள் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் அத்தகைய விண்ணப்பமொன்று அல்லது மேன்முறையீடொன்று அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு முகவரியிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் தவிர்ந்த வேறு சந்தர்ப்பங்களில் அவ்வுத்தியோகத்தர் கடைசியாகப் பணி புரிந்த திணைக்களத்தின் தலைவரூடாகவே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

இ) ஒழுக்காற்று விடயமொன்று தொடர்பான மேன்முறையீடொன்றாயின் தாபன விதிக்கோவையின் XXVIII ஆம் அத்தியாயத்தின் விதிகளுக்கு அமைந்தனவாதல் வேண்டும்.

ஈ) அரசாங்க உத்தியோகத்தரொருவரால் சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பமொன்று அல்லது மேன்முறையீடொன்று தொடர்பாயின் அதற்கு மேலதிகமாக பிரிவு 6 இன் ஏற்பாடுகளும் ஏற்புடையனவாதல் வேண்டும்.

பொதுமகன் அல்லது அரசாங்க உத்தியோகத்தரொருவர் தனது தனிப்பட்ட முறையில் முன்வைக்கின்ற விளம்பல்கள் எந்த விதிமுறையில் அமைதல் வேண்டும்? தாபன விதிக்கோவையின் XXVIII

 

1) அது கையெழுத்திலோ, தட்டெழுத்திலோ அல்லது அச்சிடப்பட்டோ அனுப்பப்படலாம்; 

2) கையெழுத்திலிருப்பின் அது தெளிவாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும். அதே போன்று எழுத்துக்கள் மனுதாரரின் கையெழுத்தில் எழுதப்பட்டிராதவிடத்து, மனுச் செய்பவரின் கையொப்பம் அல்லது பெருவிரல் அடையாளத்திற்கு மேலதிகமாக அதைத் தயாரித்தவரும் அதில் தெளிவான எழுத்துக்களில் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.

3) ஒரு மனு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மனுதாரரின் அல்லது மனுவை வரைந்தவர் வேறொருவராயின், பிரதான மனுதாரரினதும் மனுவை வரைந்தவரினதும் முழுமையான முகவரிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

4) ஒரு விடயத்தோடு தொடர்புடைய முறைப்பாடுகளுக்கு மாத்திரம் மனு மட்டுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

5) மனு அனுப்பி வைக்கப்பட வேண்டியது பெறுநரின் தனிப்பட்ட பெயருக்கன்றி பதவிப் பெயருக்காகும். அதேபோன்று வேண்டப்படுவது எது என மனுவின் இறுதியில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். 

 

முன்வைக்கப்படுகின்ற விளம்பல்கள் கருத்திற் கொள்ளப்படாத சந்தர்ப்பங்களினை குறிப்பிடுக.  தாபன விதிக்கோவையின் XXVIII

 

அ) ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு முன் வழங்கப்பட்ட கட்டளையொன்றிற்கு எதிரான மேன்முறையீடொன்றாயிருந்து, அத்தாமதத்திற்கான போதிய விளக்கமொன்று அதில் குறிப்பிடப்படாதிருந்தால்,

 

ஆ) அதே அதிகாரிக்கு அல்லது அவரிலும் பார்க்க பதவியில் உயர்ந்த அதிகாரியொருவருக்கு முன்னொருமுறையும் மேன்முறையீடொன்று செய்யப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டிருப்பின்;

 

இ) ஏதேனும் சட்டமொன்றின் மூலமோ அல்லது ஒழுங்குவிதியொன்றின் மூலமோ இறுதியானதென வெளிப்படுத்தப்பட்ட தீர்ப்பொன்றிற்கு எதிராக முன் வைக்கப்படுகின்ற ஒன்றாகவிருக்குமிடத்து

ஈ) நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட செயல் முறையொன்று சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டிருப்பின்: (உதாரணம்: உயர் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்தல்)

 

உ) நீதிமன்றமொன்றில் தீர்க்கப்படவுள்ள ஒரு விடயம் தொடர்பான விசாரணையொன்றாக அல்லது புலனாய்வொன்றாக வேண்டப்படுமிடத்து:

ஊ) வாசிக்க முடியாதவாறோ அல்லது புரிந்து கொள்ள முடியாதவாறோ அல்லது முறையற்ற அல்லது நாகரிகமற்ற மொழி நடையிலோ எழுதப்பட்டுள்ளவிடத்து,

எ) முதலில் உரிய திணைக்களத் தலைவருக்கு சமர்ப்பிக்காமல் எடுத்த எடுப்பிலேயே செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளவிடத்து,

 

சனாதிபதியவர்களினால் எவ்வாறான மனுவொன்று கையேற்கப்படும்?

 

அ) அரசியலமைப்பின் கீழ் முறையாக தனக்குச் சமர்ப்பிக்கப்பட முடிந்த ஒரு விடயம் தொடர்பான மனு மாத்திரமாகும்.

அ) குறித்த மனு ஓர் அமைச்சரின் விடயப் பரப்புக்குள் வரக்கூடிய விடயமொன்று தொடர்பாகவும் அது சனாதிபதிக்கு முகவரியிடப்பட்டு அனுப்பப்படுமிடத்து அவரால் அது உரிய அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும்.