DO III Past Paper

Friday, September 3, 2021

தொழிற்சங்கங்க உறுப்பினர்களுக்கான சலுகைகள் வினாவிடைகள் 12 Offers for members of trade unions



தற்பொழுது அரசாங்க உத்தியோகத்தர்களின் பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கமொன்றின் உறுப்பினரொருவருக்கான சந்தாப்பணம் எவ்வாறு அறவிடப்படுகின்றது? 

அவரின் சம்பளப் பட்டியலினூடாக அறவிடப்படுகின்றது. 

 

பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கம் என்றால் என்ன?

 

தொழிற்சங்கங்களின் பதிவாளரினால் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமொன்றாகும்.

 

தொழிற்சங்க சந்தாப்பணத்தினை சம்பளப் பட்டியல் மூலம் அறவிடும் வகையில் திணைக்களமொன்றினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

 

அ) சம்பளப் பட்டியலினூடாக சந்தாப்பணத்தினை அறவிடுவதற்கு தனது சம்மதத்தைத் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர் ஒப்பமிட்ட மாதிரிப் படிவமொன்று சங்கத்தால் சம்பந்தப்பட்ட சம்பளக் கொடுப்பனவு உத்தியோகத்தருக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

ஆ) இப்படிவம் திணைக்களத்திலுள்ள உத்தியோகத்தரின் தனிப்பட்ட பெயர் வழிக்கோப்பில் Personal File கோவைப்படுத்தப்படல் வேண்டும்.

 

இ) உத்தியோகத்தரொருவர் வேறொரு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்படுமிடத்து சந்தாப்பணத்தினை, சம்பளப் பட்டியலினூடாக அறவிடுவதற்காக புதிய சம்பளக் கொடுப்பனவு உத்தியோகத்தருக்கு அனுப்பப்படுகின்ற கழிவீடுகள் தொடர்பான பட்டியலில் குறிப்பிடப்படல் வேண்டும்.

 

ஈ) உத்தியோகத்தரொருவர் சம்பளக் கொடுப்பனவு உத்தியோகத்தருக்கு தனது முந்திய விருப்பத் தெரிவை இல்லாதொழித்து எழுத்து மூலம் அறிவிக்கலாம்.

 

உ) அத்தகைய நிறுத்த அறிவிப்பு சங்கம் மூலம் அனுப்பப்படாதவிடத்து, அவ்வுறுப்பினரிடமிருந்தான அறவீடு தன்னால் எத்தேதியிலிருந்து நிறுத்தப்படுமென சம்பளக் கொடுப்பனவு உத்தியோகத்தர் சங்கத்திற்கு எழுத்தில் அறிவித்தல் வேண்டும்.

 

ஊ) உரிய உத்தியோகத்தரோடு உரையாடி அவரது முடிவை மாற்றிக் கொள்வதற்காக கால அவகாசமளிக்குமாறு எத்தரப்பினாலும் முன் வைக்கப்படும் கோரிக்கை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

 

எ) மாதாந்த சந்தாப்பணத்தினை அறவிடும் சங்கமொன்று அதன் ஒவ்வோர் உறுப்பினரிடமிருந்தும் நிதியாண்டின் முதல் மாதம் தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள அறவிடல் பற்றிய அட்டவணையொன்றின் இணைப்பிரதியினை சம்பளக் கொடுப்பனவு உத்தியோகத்தருக்குக் வழங்குதல் வேண்டும்.

ஏ) காலாண்டுக்கொரு முறையோ, அரையாண்டிற்கொரு முறையோ அல்லது ஆண்டுக்கொரு முறையோ சந்தாப்பணத்தினை சேகரிக்கின்ற சங்கமொன்று பணம் அறவிடப்பட வேண்டிய முதல் மாதத்தின் 7ம் நாளுக்கு முன்னர் உரிய பட்டியல்களை இணைப் பிரதிகளில் கொடுத்துதவுதல் வேண்டும்.

 

ஐ) உத்தியோகத்தரொருவர் மற்றொரு திணைக்களத்துக்கு இடமாற்றஞ் செய்யப்படுமிடத்து, அறவிடப்படவேண்டிய தொகைபற்றி அத்திணைக்களம் புதிய திணைக்களத்திற்கு அறிவித்தல் வேண்டும்.

 

சங்க உறுப்பினரொருவருக்கு அவரின் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்துக்கு சமுகமளித்தல் மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக வழங்கப்படும் விடுமுறை சலுகைகளை குறிப்பிடுக.

 

1) ஒருநாள் கடமை லீவும் ஒரு சோடி புகையிரத ஆணைச்சீட்டுக்களும் வழங்கப்படலாம்.

 

2) சங்கமொன்றின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான உரித்துடைமையுடைய உத்தியோகத்தர் ஒருவர் தனிப்பட்ட முறையில் கோரிக்கை முன்வைக்கின்ற சந்தர்ப்பங்களில் இலவச புகையிரத ஆணைச்சீட்டு வழங்குவதற்குப் பதிலாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ்வண்டிகளில் பிரயாணம் செய்ததற்கான செலவினை மீள்நிரப்புச் செய்ய முடியும்.

 

3) சங்கமொன்றின் பிரதிநிதிக் குழு உறுப்பினரொருவருக்கு, அமைச்சரொரு வரையோ, செயலாளரொருவரையோ அல்லது திணைக்களத் தலைவரொருவரையோ பொருத்தமான அனுமதியுடன் நேர்முகமாகச் சந்திப்பதற்கு மூன்று அங்கத்தவர்களுக்கு மேற்படாமல் கடமை லீவும் புகையிரத ஆணைச்சீட்டுக்களும் வழங்கப்படலாம்.

தொழிற் சங்கமொன்றின் உறுப்பினர்களுக்கு ஆணைச்சீட்டு வழங்கும் நடைமுறைகளை குறிப்பிடுக.

 

அ) ஆணைச்சீட்டில் “கடமையின் தன்மை” என்ற கூட்டிற்கெதிரே (தொழிற்சங்கத்தினைக் குறிக்கும்) தொ.ச என்ற எழுத்துக்கள் எழுதப்படல் வேண்டும். 

 

ஆ) ஆணைச்சீட்டு வழங்கலுக்கான குறிப்பான காரணமும் சம்பந்தப்பட்ட தொழிற் சங்கத்தின் பெயரும் சுட்டிக்காட்டப்படுதல் வேண்டும். (உதாரணம் – தொ.ச. – ….. சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம்.) 

 

இ) இத்தகைய செலவினத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு ஏற்படுகின்ற போது கணக்குக் கொடுப்பனவுப் பணிப்பாளரிடமிருந்து ஒதுக்கீடொன்று பெறப்படுதல் வேண்டும்.

 

ஈ) ஒதுக்கீட்டைப் பெறுவதிலும் அவ்வொதுக்கீட்டோடு தொடர்புடைய பற்றுத் தொடர்பாக அறிவிப்பதிலும் கணக்குக் கொடுப்பனவுப் பணிப்பாளர் விதித்துரைத்துள்ள நடைமுறையினைப் பின்பற்றுதல் வேண்டும்.

 

தொழிற் சங்கமொன்றின் பதவியிலுள்ள ஒருவரை முழுநேர தொழிற் சங்க வேலைக்கு விடுவித்தல் தொடர்பிலான விதிமுறைகளை கூறிப்பிடுக.

 

1) முழுநேர தொழிற்சங்க வேலைக்கு சேவையின் அவசர கால தேவைப்பாட்டுக்கு அமைய இரண்டு ஆண்டுகளுக்கோ அல்லது சங்கத்தில் பதவி வகிக்கும் வரையிலோ இதில் எது குறைவோ அக்காலப்பகுதி வரை விடுவிக்கப்படலாம்.

 

2) உரிய சங்கத்தின் கோரிக்கைகளின்படி உத்தியோகத்தரொருவரின் விடுவிப்புக் காலத்தை நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

 

3) உத்தியோகத்தரொருவரை விடுவிப்பதாயின், சங்கத்தின் உறுப்பாண்மை பரவலாகக் காணப்படுமிடத்து, ஆகக் குறைந்தது 1,500 பேருக்கான உறுப்பாண்மையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

4) 3000 பேருக்கு மேற்பட்ட உறுப்பாண்மையைக் கொண்டுள்ள ஒரு சங்கத்திற்கு முழுநேர சங்க வேலைக்காக இரு உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்படலாம்.

5) அங்கத்தினர்களின் எண்ணிக்கை 1000லும் குறைவான போதிலும் 500லும் கூடுதலான அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்காக உத்தியோகத்தர்கள் முழுநேரம் விடுவிக்கப்பட மாட்டார்களென்பதோடு, அதன் பிரதான உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் கடமை லீவு வழங்கப்படல் வேண்டும்.

 

6) வேண்டுகோளொன்றுக்கமைய நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கான விடுவிப்பு, சேவையின் அவசர தேவைப்பாடுகளுக்கு அமைய உத்தியோகத்தர் சார்ந்துள்ள திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் இணக்கத்துடன் ஆண்டுதோறும் நீடிக்கப்படலாம்.

 

தொழிற் சங்கமொன்றின் பதவியிலுள்ள ஒருவரை முழுநேர தொழிற் சங்க வேலைக்கு விடுவித்தல் தொடர்பிலான அனுமதி யாரிடம் பெறப்படுதல் வேண்டும்?

 

தாபனப் பணிப்பாளர் நாயகத்திடம் முன்னங்கீகாரம் பெறப்படுதல் வேண்டும்.

 

சங்கமொன்றின் முழுநேர வேலைக்காக விடுவிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு எவ்வாறு சம்பளம் வழங்கப்படல் வேண்டும்? 

 

1) உத்தியோகத்தர் ஓய்வூதியத்திற்குரிய நியமனமொன்றை வகிக்கின்றவராயின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையாக அவரது சம்பளத்தில் 25 சதவீதத்தை சங்கம் செலுத்துதல் வேண்டும்.

 

2) அவர் பகிரங்க சேவை சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்கின்றவராயின், அரசாங்கத்தின் பங்களிப்பை பகிரங்க சேவை சேமலாப நிதியத்திற்கு சங்கம் செலுத்துதல் வேண்டும்.

 

3) அவ்வாறே அத்தகைய உத்தியோகத்தரொருவரின் சம்பளம், வாழ்க்கைச் செலவுப்படி அரசாங்கத்தால் கொடுப்பனவு செய்யப்படல் வேண்டும்.

உத்தியோகத்தர் ஒருவரை தொழிற் சங்க சம்மேளனங்களின் வேலைக்காக விடுவிக்கும் போது வழங்கப்படும் சலுகைகளை குறிப்பிடுக.

 

அ) அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிற் சங்க சம்மேளனம் சார்பாகவும் இரண்டு உத்தியோகத்தர்கள் முழுநேர சம்மேளன வேலைக்காக விடுவிக்கப்படலாம்.

 

ஆ) இவ்வாறு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தரொருவருக்கான சம்பளம் மற்றும் படிகள் அரசாங்கத்தினால் செலுத்தப்படும்.

 

இ) விடுவிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு சங்க வேலைக்காக நாட்டிலுள்ள ஏதேனும் நிலையத்திற்குச் செல்வதற்காக இலவச புகையிரத ஆணைச்சீட்டுக்கள் மற்றும் போக்குவரத்துச் சபை பஸ்வண்டிகளுக்கான இலவச அனுமதிச்சீட்டுக்கள் என்பன வழங்கப்படுதல் வேண்டும்.

 

ஈ) தொழிற்சங்க சம்மேளனமொன்றோடு கூட்டிணைக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு, தமது சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு நாளைக்கான கடமை விடுமுறையையும், இலவச புகையிரத ஆணைச்சீட்டும் சேவையின் அவசரத் தேவைகளுக்குட்பட்டு வழங்க முடியும்.

 

உ) இவர்கள் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுக்கின்ற சந்தர்ப்பங்களில், வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலவச புகையிரத ஆணைச்சீட்டுத் தொகுதிக்குப் பதிலாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்வண்டிகளில் பயணம் செய்ததற்கான செலவை மீளளிப்புச் செய்ய முடியும்.

 

தொழிற்சங்க உத்தியோகத்தர்களின் இடமாற்றம் எவ்வாறு கையாளப்படுகின்றது? 

 

1) சங்கத்தின் தாய் நிறுவனத்தின் பிரதான பதவி தாங்குநர்களான உத்தியோகத்தர்கள், சங்க வேலைக்காக அவர்களின் சேவை தேவைப்படுத்தப்படுகின்ற நிலையங்களுக்கு நியமிக்கப்படுதல் வேண்டும்.

அவர்கள், சாதாரண இடமாற்ற விதிகளின் கீழ் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்படமாட்டார்கள். இடமாற்றம் செய்யும் தீர்மானம் அமைச்சின் செயலாளரினால் எடுக்கப்படல் வேண்டும்.

 

2) எப்பொழுதும் இச்சலுகை அளிக்கப்பட வேண்டியது, சேவையின் அவசர தேவைப்பாடுகளுக்கும், ஒழுக்காறு தொடர்பான விதிகளுக்கும் அமைவாகவேயாகும்.

 

3) இச்சலுகையை அனுபவிக்கின்ற உத்தியோகத்தரொருவர் ஒழுக்காறு தொடர்பான விடயம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் அத்திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரம் பெறப்படுதல் வேண்டும்.

இடமாற்ற சலுகையைப் அனுபவிக்க விரும்புகின்ற சங்கமொன்று சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்தில் அடங்கும் விடயங்களை குறிப்பிடுக.

 

1) இச்சலுகை வழங்கப்பட எதிர்பார்க்கப்படுகின்ற பதவிதாங்குநர்களின் பெயர்கள் 

 

2) குறித்த உத்தியோகத்தர்கள் அமர்த்தப்படவேண்டிய நிலையங்கள் 

 

3) சங்கத்தின் தற்போதுள்ள உறுப்பாண்மைகளின் எண்ணிக்கை

 

அந்தந்த சங்கங்களுக்கான உரிய அதிகாரி என்பவர் யார் என்பதை குறிப்பிடுக? 

 

அ) இணைந்த சேவையொன்றுக்குரிய உத்தியோகத்தர்களைக் கொண்ட சங்கமொன்று தொடர்பில் பொது நிருவாக அமைச்சின் செயலாளர் 

 

ஆ) ஒரு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை மாத்திரம் உறுப்பாண்மையாகக் கொண்டுள்ள சங்கமொன்று தொடர்பில் அத்திணைக்களத்தின் தலைவர்.

 

இ) ஒரு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் உறுப்பாண்மை மட்டுப்படுத்தப்படாத சங்கமொன்று தொடர்பில் பொது நிருவாக அமைச்சின் செயலாளர்.

 

எவ்வாறான சுற்றறிக்கைகளின் பிரதிகள் சங்கமொன்றுக்கு வழங்கப்பட முடியாது? 

 

அந்தரங்க அல்லது மிக இரகசியத் தன்மை வாய்ந்த சுற்றறிக்கைகளின் பிரதிகள் சங்கமொன்றிற்கு வழங்கப்படக் கூடாது.