DO III Past Paper

Saturday, September 4, 2021

சம்பளக் கடன்கள் முற்பணங்கள் தாபன விதிக்கோவை வினாவிடைகள் 13 Salary Loans and Advance



தாபன விதிக்கோவை அத்தியாயம் XXIV இன்படி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, சம்பளக் கடன்களை வழங்குவதற்காக பணம் எந்த தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது?

வருடாந்த வரவு செலவு மதிப்பீடுகளின் II ஆம் பகுதியின், முற்பணக் கணக்குகளின் “அரச ஊழியர்களுக்கான முற்பணங்கள்” (Advance Account) எனும் தலைப்பின் கீழாகும். 

 

சம்பளக் கடன்களை வழங்குவதற்காக ஒதுக்கீட்டு தலைப்பின் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளுக்கு அப்பால் செல்வதற்கு யாரின் அனுமதி அவசியமாகும்?

 

அமைச்சரவையின் முன்னனுமதி அவசியமாகும்.

 

திணைக்களத்தில் கடன் பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றத்தில் செல்லும் போது அவர் பெற்ற கடன் அறவீடு (Loan Recovery) தொடர்பாக இரண்டு திணைக்களங்களும் செயற்பட வேண்டிய விதங்களை குறிப்பிடுக.

 

அ) அவர் எத்திணைக்களத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டாரோ, அத்திணைக்களம் அவ்வுத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கடன்கள் அல்லது முற்பணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும், உரிய மாதிரிப் படிவங்கள் மூலம், அவ்வுத்தியோகத்தர் இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற திணைக்களத்திற்குத் தாமதமின்றி அறிவித்தல் வேண்டும்.

 

ஆ) அவ்வுத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகையை அறவிட்டுக்கொள்வதற்காக அவ்விபரங்களை, புதிய திணைக்களம் உரிய முறையில் குறித்துக் கொண்டதென்ற தகவல் அடங்கிய கடிதம் ஒன்றை அத்திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

 

இ) திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையானது “அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான முற்பணம்” என்னும் கணக்கில் பற்று வைக்கப்பட்டு புதிய திணைக்களம் அவரை விடுவிக்கின்ற திணைக்களத்திற்குச் செலுத்துதல் வேண்டும்.

 

ஈ) ஒப்பந்தம், பிணைமுறி, அட்டோர்னிப் பத்திரம், உரித்துறுதி ஆகிய ஆவணங்களை உத்தியோகத்தர் இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற திணைக்களத்திற்கு அனுப்பாமல் உத்தியோகத்தர் கடன் பெற்ற திணைக்களத்தின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்.

 

உ) அவ்வாவணங்களை விடுவிக்க வேண்டியது வட்டி (Interest) மற்றும் (உரிய சந்தர்ப்பங்களில்) காப்புறுதித் தவணை (Insurance Instalment) உட்பட மொத்தக் கடன் தொகையையும் செலுத்தி முடித்ததன் பின்னரேயாகும்.

 

உத்தியோகத்தர் ஒருவருக்கு கடன்கள்/ முற்பணங்கள் வழங்கப்படக் கூடிய காரணங்களை குறிப்பிடுக.

 

1) மோட்டார் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக,  

 

2) மோட்டார் சைக்கிள் ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்காக,

 

3) மிதிவண்டி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக,

 

4) பணக் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்காக, 

 

5) வீடொன்றைக் கட்டுவதற்காக காணியொன்றை அல்லது வீட்டு ஆதனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக,

 

6) கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்காக,

 

7) நாட்டிற்குள் ஏற்படுகின்ற குழப்பம் காரணமாக அசையா ஆதனங்களுக்கு சேதம் ஏற்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சம்பள முற்பணங்கள்,

அரச உத்தியோகத்தர்களுக்கு கடன் கொடுப்பதற்கான பொது நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

1) முழுக்கடன் தொகையும் அது பெற்றுக்கொடுக்கப்பட்ட விசேட பணிக்காக கால தாமதமின்றி பயன்படுத்தப்படல் வேண்டும்.

 

2) கடன் தொகை வழங்கப்படுகின்ற விசேட பணிக்கான அம்முழுக் கடன் தொகையுமோ அல்லது அதன் ஒரு பகுதியோ பயன்படுத்தப்படாவிடின், அத்தொகை உடனடியாக மீளச் செலுத்துதல் வேண்டும்.

 

3) வாகனமொன்றை அல்லது வீடொன்றைக் கட்டுவதற்கான காணியொன்றை அல்லது வீட்டு ஆதனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கடன் வழங்கப்படுமிடத்து, கடன் வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் கொள்வனவுப் பணியை நிறைவு செய்து, அதற்கான சாட்சியாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிடின், கடனாக வழங்கப்பட்ட பணத்தை உடனடியாக அரசாங்கத்திற்கு மீளச் செலுத்துதல் வேண்டும்.

 

4) உரிய முறைப்படி செயற்படாததன் காரணமாக கடன் தொகையை அல்லது செலவழிக்கப்படாது எஞ்சியுள்ள பகுதியினை உடன் திருப்பிக் கொடுக்கத் தவறுமிடத்து, கடன் கொடுக்கும் அதிகாரி, உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து அறவிடப்பட வேண்டிய முழுத் தொகையையும் மீளச் செலுத்தும் வரை உடனடியாக மாதாந்த கடன் தவணையை இருமடங்காக்கி வட்டி வீதத்தை 5% வீதத்தால் அதிகரிக்கச் செய்தல் வேண்டும்.

 

5) மேலும் குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினையும் ஆரம்பித்தல் வேண்டும்.

 

6) உறுதிப்படுத்தல் ஆவணங்கள் – கடன் கொடுக்க முன்னர் அல்லது பின்னர் சமர்ப்பிக்க வேண்டிய (மதிப்பீடுகள், பற்றுச் சீட்டுக்கள் உரிமையினை நிரூபிக்கின்ற ஆவணங்கள் போன்ற) தேவையான அனைத்து ஆவணங்களையும் கடனைப் பெற்றுக் கொள்கின்ற உத்தியோகத்தர் தாமதமின்றி சமர்ப்பித்தல் வேண்டும்.

 

உத்தியோகத்தர் ஒருவரின் மாதாந்த கடன்  அறவீட்டுக் கூட்டுத்தொகைகளின் எல்லை எவ்வாறு அமைதல் வேண்டும்?

 

அ) கடன் தவணைக்காகவும் (20ஆம் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அறவீடுகள் தவிர்ந்த) வேறு அறவீடுகளுக்காகவும், எவரேனுமோர் உத்தியோகத்தரின் சம்பளப் பட்டியலிலிருந்து மாதமொன்றிற்கு கழிக்கப்படுகின்ற மொத்தத் தொகை அவரது மாதாந்த சம்பளத்தின் 40 சதவீதத்தையும் விஞ்சலாகாது.

 

ஆ) இவ்வெல்லைகளை விஞ்சும் விதத்திலான கடன் தொகை ஒன்றினை வழங்கலாகாது.

 

உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட கடனை சம்பளத்திலிருந்து மீள அறவிடும் செயல் முறையை குறிப்பிடுக. 

 

1) கடன் தொகையை மீள அறவிடல் ஆரம்பிக்கப்பட வேண்டியது, கடன் தொகை வழங்கப்பட்ட மாதத்திற்கு உடனடுத்த மாதத்திலிருந்தாகும். 

 

2) கடன் வழங்கப்பட்ட திகதி முதல் உரிய தொகை வட்டி சம்பளத்திலிருந்து அறவிடப்படல் வேண்டும்.

 

3) விழா முற்பணம் மற்றும் வங்கிகளூடாக வழங்கப்படுகின்ற கடன்கள் தவிர்ந்த, அனைத்துக் கடன் தொகைகள் தொடர்பாகவும் 4.2% வட்டி அறவிடவேண்டுமென்பதோடு, அதை மாதாந்தம் அறவிடலும் வேண்டும்.

 

4) ஒவ்வொரு மாதத்திலும் அறவிட வேண்டிய வட்டித் தொகையைக் கணிப்பிட வேண்டியது தாபன விதிக்கோவையின் 21 ஆம் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கமையவேயாகும்.

 

5) உரிய காலத்திற்கு முன் முழுக்கடன் பணத்தையும் மீளச் செலுத்துகின்ற சந்தர்ப்பமொன்றில் அறவிட வேண்டிய மொத்த வட்டி, 21 ஆம் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மீண்டும் கணிப்பிடப்படல் வேண்டும்.

 

6) கடன் தொகையையும், அதற்குச் செலுத்தப்பட வேண்டிய மொத்த வட்டியையும் முழுமையாகச் செலுத்தி முடியும் வரை, வழங்கப்பட்ட கடன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம், வீடு அல்லது காணி என்பன கடனை அனுமதித்த அதிகாரியின் முன்னனுமதியின்றி விற்பனை செய்தல், அடகு வைத்தல் கூடாது.

உத்தியோகத்தர் கடன் தொகையொன்றின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட எந்தவொரு வாகனத்தையாயினும், காப்புறுதி செய்யும்போது எந்த காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்? 

 

முழுக்கடன் தொகைக்கு அல்லது கடன் தொகையில் மீள மீதித்தொகைக்குக் குறையாத பெறுமதிக்கு அனைத்து வகையான ஆபத்துக்கள் தொடர்பாகவும், அரசாங்கக் காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் அகல் விரிவான காப்புறுதி (Full Insurance in the Sri Lanka Insurance Corporation) செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

 

கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டிய படிவங்களை குறிப்பிடுக.

 

அ) வீடொன்றைக் கட்டுவதற்கான காணியொன்றை அல்லது வீட்டு ஆதனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக: – 26 ஆம் பின்னிணைப்பிற்கமைய

 

ஆ) மோட்டார் வாகனமொன்றை அல்லது மிதிவண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்காக:  – 31 ஆம் பின்னிணைப்பிற்கமைய

 

இ) ஏனைய அனைத்து பணிகளுக்காகவும் : கடன் வழங்கும் அதிகாரியினால் தயாரிக்கப்பட்ட மாதிரிப் படிவம்

 

அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு ஏதேனுமொரு கடன் தொகை ஒன்றினை வழங்குவதற்கு முன்னர், எழுத்து மூல ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடல் வேண்டும். அதற்கான படிவங்களை குறிப்பிடுக.

 

பொது மாதிரிப் படிவம் 251 – மிதிவண்டி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக 

 

பொது மாதிரிப் படிவம் 272 வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்ற கடன்கள் தவிர ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்குமாக.

பிணை முறியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அதனை எழுதிக் கையொப்பமிட வேண்டிய, படிவம் எது?

 

சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் கைச்சாத்திடப்படல் வேண்டுமென்று விதிக்கப்பட்டிருக்கின்ற கடனை தவிர ஏனைய அனைத்து வகையான கடன் வகைகளுக்கும்: 158 ஆம் பொது மாதிரிப் படிவம்

 

அத்தியாயம் XXIV விதிகளின் கீழ் அங்கீகரிக்க முடியாத பிணையாளர் யார்?

 

அ) பிரதான கடனாளியின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிகின்ற எவரேனுமோர் உத்தியோகத்தர் அக்குறிப்பிட்ட கடனாளியின் பிணையாளராக அங்கீகரிக்கப்படமாட்டார். (உதாரணமாக : ஆரம்ப நிலை ஊழியர் ஒருவர் அல்லது உபநிலை உத்தியோகத்தர் ஒருவர் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவருக்காகப் பிணையாளராக அங்கீகரிக்கப்படக்கூடாது.)

 

ஆ) கடன் பணத்தை மீளச்செலுத்தி முடிப்பதற்கு முன்னர் இளைப்பாற உள்ள உத்தியோகத்தர் ஒருவரை பிணையாளர் ஒருவராக முன்வைப்பதாயின், அந்த உத்தியோகத்தர் ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஏற்றுக்கொள்ளக் கூடிய வேறு ஒரு பிணையாளரை தான் முன்வைப்பதாக கடனாளி எழுத்து மூல உறுதி மொழியொன்றைக் கொடுத்தாலன்றி அத்தகைய உத்தியோகத்தரை பிணையாளராக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

 

பிணையாளர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டால் அல்லது இறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?

 

1) கடனாளி ஏற்றுக் கொள்ளக்கூடிய வேறொரு பிணையாளரை ஒரு மாதத்திற்குள் முன்வைத்தல் வேண்டும்.

 

2) ஏற்றுக் கொள்ளப்படத்தக்க வேறொரு பிணையாளரை முன்வைக்க பிரதான கடனாளி தவறுமிடத்து, மீளச் செலுத்தப்படவுள்ள கடன் மீதியை உடனடியாகச் செலுத்துமாறு அவருக்குக் கட்டளை பிறப்பிக்கப்படல் வேண்டும்.