DO III Past Paper

Sunday, September 5, 2021

உள்நாட்டில் கடமைப் பிரயாணங்கள் வினாவிடைகள் தொடர் 18 Travelling for Duty

 



உள்நாட்டில் கடமைப் பிரயாணங்கள் (Travelling for duty)

அத்தியாயம் XIV இன்படி தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டில் பிரயாணம் செய்வதற்குத் தேவைப்படுத்தப்படுகின்ற ஓர் அரசாங்க உத்தியோகத்தருக்கு பிரயாணச் செலவுகள் கொடுப்பனவு செய்யப்படும் ஏற்பாடுகளை குறிப்பிடுக.

 

இக்கொடுப்பனவு உண்மையில் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரயாணங்களின் செலவினங்களை அல்லது கடமை நடவடிக்கைகளுக்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள வாகனமொன்றின் பேணுகைச் செலவினங்களை மீளளிப்புச் செய்கின்ற ஒரு கொடுப்பனவு  ஆகும்.

 

“இணைந்தபடி” என்றால் என்ன?

 

உறைவிடத்துக்காகவும், உணவுக்காகவும் செலவிடப்பட்ட செலவினங்களின் மீளளிப்புக்காக கொடுப்பனவு செய்யப்படும் நிதியாகும்.

 

அத்தியாயம் XIV இன்படி “பிரயாணச் செலவுகள்” என்பதன் மூலம் கருதப்படுவது யாது?

 

உள்நாட்டில் வீதி மூலமாக வாகனங்களில் போக்குவரத்துச் செய்வதில் செலவிடப்பட்ட செலவு மீளளிப்பாகக் கொடுப்பனவு செய்யப்படுகின்ற “மைல் கூலியாகும்”. 

 

பிரயாணச் செலவினங்கள் கோரப்பட வேண்டிய அச்சிடப்பட்ட படிவத்தில் விசேடமாக குறிப்பிட வேண்டிய விடயங்கள் யாவை?

 

வாகனத்தின் வகை மற்றும் அதன் பதிவு இலக்கம் என்பன கோரிக்கை படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

உள்நாட்டில் டமைப் பயணமொன்று தொடங்கிய இடமாக கருதப்படுவது எது?

 

ஓர் உத்தியோகபூர்வ பயணத்தின் தொடக்க இடமாகக் கருதப்பட வேண்டியது உத்தியோகத்தர் தொழில் புரியும் இடமாகும்.

 

அவர் உண்மையிலேயே அவரது வதிவிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்திருந்தால் அவரது வதிவிடம் தொடங்கிய இடமாகக் கருதப்பட முடிவது அவரது வதிவிடம் அவர் தொழில் புரியும் இடத்திலிருந்து 4 மைல்களுக்குள் அமைந்திருக்குமிடத்தோ அல்லது அவர் சேர வேண்டிய இடத்திலிருந்து அவரது வதிவிடம் அவரது தொழில் புரியும் இடத்தை விட அண்மையில் அமைந்திருக்குமிடத்தோ மாத்திரமே ஆகும்.

 

உள்நாட்டில் கடமைப் பிரயாணம் செய்யும் போது தூரங்கள் தொடர்பாக கவனிக்க வேண்டிய விடயங்களை குறிப்பிடுக.

 

அ) உள்நாட்டில் கடமைப் பிரயாணம் மேற்கொள்ளப்பட வேண்டியது, அந்தந்த சூழ்நிலைகளுக்கமைய மிக விரைவாகவும், கூடியளவு குறுகிய தூரம் கொண்ட வழிகளூடாகவும் மற்றும் அரசாங்கத்துக்கு ஆகக்குறைந்த செலவை ஏற்படுத்தக் கூடிய விதத்திலுமேயாகும்.

 

ஆ) நிலவுகின்ற நிலைமைகளுக்கமைய தொலைதூரப் பாதையொன்றூடாக செல்வதற்கான அல்லது இடைவழியில் தரித்துச் செல்வதற்கான அவசியம் ஏற்படின் அவ்வாறு அவசியப்பட்டமைக்கான காரணம் பிரயாணக் கோரிக்கைப் படிவத்தில் காட்டப்படுதல் வேண்டும்.

 

இ) அளவுக்கதிகமான செலவொன்றை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தக் கூடிய ஒரு வழியில் அல்லது விதத்தில் உத்தியோகத்தர் ஒருவர் பிரயாணம் செய்திருப்பின், அவருக்குக் கொடுப்பனவு செய்யப்படுவது மிகக்குறைந்த செலவில் செல்ல முடிந்தவாறு பிரயாணம் செய்திருந்தால் அவருக்குக் கொடுப்பனவு செய்யப்படவிருந்த அத்தொகை மாத்திரமே ஆகும்.

 

இணைந்த படி கொடுப்பனவு செய்ய முடிந்த சந்தர்ப்பங்கள் யாவை?

 

உள்நாட்டில் பிரயாணத்தின் தூரம் ஏழு மைல்களிலும் அதிகமாயின் , கடமைக்காக பிரயாணம் செய்யும் ஓர் உத்தியோகத்தருக்கு, கடமை நிமித்தம் தனது சேவை நிலையத்திலிருந்து வெளியே கழிக்கின்ற காலப் பகுதிக்காக அவரது உறைவிடம் மற்றும் உணவு தொடர்பான இணைந்த செலவை ஈடுசெய்வதற்காக படியொன்று 12 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய வழங்கப்படும்.

கடமைப் படி என்றால் என்ன?

 

தகைமையுள்ள ஓர் உத்தியோகத்தர், அவரது வதிவிடத்துக்கும் தொழில் புரிகின்ற இடத்துக்கும் இடையிலான தூரம் எதுவாகவிருந்த போதிலும் தொழில் புரிகின்ற இடத்தில் கடமையின் போது இரவைக் கழிப்பதற்காக இணைந்த படிக்குப் பதிலாக “கடமைப்படி” யொன்று  பெற்றுக் கொள்ள முடியும்.

 

இணைந்த படியானது எக்காலப்பகுதிக்காகச் வழங்கப்படலாம்? 

 

அ) 24 மணித்தியாலங்களைக் கொண்ட ஒவ்வொரு பூரணமான காலப்பகுதிக்கும் முழுமையான இணைந்தபடி வழங்கப்படும்.

 

ஆ) 6 மணித்தியாலங்களுக்குக் குறைந்த ஒரு காலப்பகுதிக்கு எந்த இணைந்த படியும் வழங்கப்படலாகாது.

 

இ) இணைந்த படி, செலுத்தப்பட முடிந்தது தொடர்ச்சியாகவும் இடையீடற்றதாகவும் சேவைநிலையத்திற்கு வெளியில் கழிக்கப்பட்ட காலப்பகுதிக்கு மட்டுமேயாகும். 

 

ஈ) ஓர் உத்தியோகத்தர் 24 மணித்தியாலங்களுக்கு அதிகமாக சேவை நிலையத்துக்கு வெளியே செலவிடும் போது மூன்று வார உச்சக்கால எல்லை வரை, ஒவ்வொரு 24 மணித்தியால காலப்பகுதிக்கும் இணைந்த படியின் 25% வீதம் மேலதிகமாக அவருக்குச் செலுத்தப்படலாம். மேலதிக 25% இணைந்த படி, 24 மணித்தியாலங்களுக்குக் குறைந்த ஏதேனுமொரு காலப்பகுதிக்குச் செலுத்தப்படலாகாது.

 

நாட்சம்பள உத்தியோகத்தர் ஒருவருக்கு மாதாந்தச் சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படும்? 

 

நாட்சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தரொருவரின் மாதாந்த சம்பளத்தைக் கணிப்பிட அவரது தினக் கொடுப்பனவை 30 ஆல் பெருக்குதல் வேண்டும்.

 

ஏதேனுமோர் இடத்தில் 3 நாட்களுக்கு மேல் தங்கி நிற்கும் ஒரு உத்தியோகத்தர் எவ்வாறு இணைந்த படியை பெற்றுக் கொள்ள முடியும்? 

 

ஓர் உத்தியோகத்தர் ஏதேனுமோர் இடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்க நேரிட்டால் அவர் அங்ஙனம் தங்க நேரிட்டதற்கான அவசியத்தை பிரயாணச் செலவுக் கோரிக்கைப் படிவத்தில் காட்டுதல் வேண்டும். அவ்வாறு குறிப்பிடாவிடத்து மூன்று நாட்களுக்கு மேற்படுகின்ற எந்தவொரு காலக்கெடு சார்பாகவும் அவருக்கு படிகள் வழங்கப்படலாகாது.

 

மைல்கூலி பெற்றுக்கொள்ள உரித்துடைய ஒரு உத்தியோகத்தர் தனிப்பட்ட வாகனம் மூலம் மேற்கொள்ளப்படும் கடமைப் பிரயாணத்துக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய கட்டணத் தொகையை குறிப்பிடுக.

 

பெற்றோல் வாகனமொன்றிற்காக ஒரு கிலோ மீற்றருக்கு ரூபா 12/- என்ற வீதமும்  டீசல் வாகனமொன்றிற்காக ஒரு கிலோ மீற்றருக்கு ரூபா 8/- என்ற வீதமும் மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு ஒரு கிலோ மீற்றருக்கு ரூபா 2/- என்ற வீதமும் பெற்றுக் கொள்ள முடியும். 

மைல்கூலி பெற்றுக்கொள்ள உரித்துடைய ஒரு உத்தியோகத்தர் பொது வாகனம் மூலம் மேற்கொள்ளப்படும் கடமைப் பிரயாணத்துக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய கட்டணத் தொகையை குறிப்பிடுக.

 

அவருக்கு வழங்கப்பட வேண்டிய மைல் கட்டணம் கிலோ மீற்றர் ஒன்றிற்கு 85 சதமாகும். 

 

கடமை நடவடிக்கைகளுக்காக வழமையாக, குறிப்பிட்ட தூரம் பிரயாணம் செய்யவேண்டியுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு இரவல் கார் ஒன்றைப் பாவித்து அதற்கான மைல்கூலியைப் பெற்றுக்கொள்ளும் நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

அ) ஆகக்கூடியது ஒரு வருட காலத்திற்கு திணைக்களத் தலைவரினாலும், மேலும் இன்னும் ஒரு வருடத்துக்கு செயலாளரினாலும் அனுமதிக்கப்பட முடியும். 

 

ஆ) எனினும் அவருக்கு அவ்வனுமதி வழங்கப்படுவது, அவரது சொந்தக் கார் பழுது பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது அவரது நியமனத் தேதியிலிருந்து அவர் ஒரு காரைக் கொள்வனவு செய்யும் வரை அல்லது அவர் ஒரு காரை விற்று வேறொரு காரைக் கொள்வனவு செய்வதற்கும் இடைப்பட்ட காலத்தின் போதே ஆகும்.

 

இரவல் வாகனத்தைப் பயன்படுத்தி, அதன் பயன்பாட்டுக்காக மைல் கூலியைக் கோருகின்ற உத்தியோகத்தரொருவர் ஒவ்வொரு பிரயாணக் கோரிக்கையுடனும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறிப்பிடுக.

 

1) காரின் சொந்தக்காரர் அரசாங்க உத்தியோகத்தரொருவராயின்

(அ) அவரது திணைக்களமும் பதவியும்

(ஆ) அதே பயணத்துக்காக அவர் மைல்கூலியைக் கோரமாட்டாரெனக் குறிப்பிடுகின்ற அவரிடமிருந்து பெறப்பட்ட ஒரு சான்றிதழ்.

 

2) மோட்டார் கார் பயன்படுத்தப்பட்டமை பிரயாணச் செலவுக் கோரிக்கைப் படிவத்தில் காட்டப்பட்டுள்ள குறிப்பான விடயத்துக்காக மாத்திரமே எனக் கூறுகின்ற தானே தயாரித்த சான்றிதழொன்று.

 

3) இரவல் மோட்டார் காரினூடாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்கான மைல்கூலிக்கான ஒவ்வொரு கோரிக்கையினதும் ஒரு பிரதி உரிய இடங்களில் அக்கோரிக்கையை சான்றுறுதிப்படுத்துகின்ற அலுவலரினால், இரவல் காரின் சொந்தக்காரர் பணிபுரிகின்ற திணைக்களத்தின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். 

 

4) அத்தகைய பிரதிகளில் “பணம் செலுத்தப்பட்டது” என்னும் சொற்றொடர் தெளிவாக முத்திரை மூலம் பதிக்கப்படுதல் வேண்டும்.

 

உத்தியோகபூர்வ பயணமொன்றில் ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரயாணம் செய்தால் அவர்களுக்கான மைல்கூலி எவ்வாறு வழங்கப்படும்? 

 

அ) அவர்களுள் மைல்கூலிக்கு கோரிக்கை விடுக்க வேண்டியவர் அவர்களில் ஒருவர் மாத்திரமேயாவார். அவர்களுள் ஒருவர் வாகனத்தின் சொந்தக்காரராயிருந்து, மைல்கூலிக்கு உரித்துடையவராயுமிருந்தால் அவர் மட்டுமே மைல்கூலியைக் கோர வேண்டும்.

 

ஆ) சொந்தக்காரர் மைல்கூலிக்கு உரித்துடையவரல்லாதவராயின், அதே பிரயாணத்தின்போது அதே வாகனத்தில் பிரயாணம் செய்தவரும் அப்பிரயாணத்துக்கான மைல்கூலிக்கு உரித்துடையவருமான வேறு எவரேனுமோர் உத்தியோகத்தர் அக்கோரிக்கையைச் செய்யலாம்.