DO III Past Paper

Monday, September 6, 2021

அரச அலுவலர்களுக்கான இணைந்த படி கொடுப்பனவுகள் வினாவிடைகள் -19 - CTA Claim for Government Officer



அரச அலுவலர்களுக்கான இணைந்த படி கொடுப்பனவுகள்

“மாற்றப்பட்ட படி” என்றால் என்ன?

அந்தந்த படியோடு தொடர்புடைய நிபந்தனைகளுக்கமைய கடமைக்காக பிரயாணம் (Travelling for Duty) செய்கின்ற அலுவலர் ஒருவரின் போக்குவரத்துச் செலவினம், இணைந்த படி மற்றும் எல்லா தனிப்பட்ட செலவினங்கள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு படியாகும்.

 

நிரந்தரப் படியொன்றைப் (Permanent Allowance) பெற்றுக் கொள்ளும் ஓர் அலுவலர் அரசாங்க வாகனமொன்றை பாவிக்கலாமா?

 

இவ்வாறான அலுவலர்கள் அரசாங்க வாகனமொன்றை இலவசமாக உபயோகிக்க முடியாது.

 

அலுவலர் ஒருவருக்கு மாற்றப்பட்ட படியொன்று கொடுப்பனவு செய்யப்படுகையில் கொடுப்பனவு உறுதிச் சீட்டொன்றுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை குறிப்பிடுக. (Attach Document’s to Voucher)

 

அ) மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் மற்றும் செய்யப்பட்ட ஒவ்வொரு பயணத்தினதும் மைல்கூலி என்பவற்றைக் குறிப்பிடுகின்ற ஒரு கூற்றொன்று அவ்வுறுதிச் சீட்டோடு இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

 

ஆ) அலுவலர் மாற்றப்பட்ட படிக்குரித்தாவதற்குத் தேவையான அளவு பயணங்கள் சென்றிருப்பதாக திணைக்களத் தலைவரின் அத்தாட்சியொன்றும் அதிலிருத்தல் வேண்டும். 

 

இ) அலுவலர் தேவையானளவு பிரயாணங்கள் மேற்கொள்ளப்படாதவிடத்து விகிதாசார கழிவீடொன்று மேற்கொள்ளப்படும்.

புகையிரதம் மூலம் ஓர் அலுவலர் தனது னிப்பட்ட வாகனத்தைக் கொண்டு செல்வதற்கான புகையிரத ஆணைச் சீட்டு (Railway Warrant) வழங்கப்படும் சந்தர்ப்பங்களை குறிப்பிடுக.

 

1) தாபன விதிக்கோவையின் XIII ஆம் அத்தியாயத்துக்கமைய பாராளுமன்றக் கடமையின்போது பிரயாணம் செய்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு

 

2) கடமைக்காக புகையிரத பிரயாண முடிவில் உபயோகிப்பதற்காக தனது மோட்டார் வண்டி அல்லது மோட்டார் சைக்கிள் இருப்பது அத்தியாவசியமாக மைல் கூலி உரித்தான ஓர் அலுவலர் ஒருவருக்கு அல்லது 

 

3) வினைத்திறனுள்ளதாக கடமையை ஆற்றுவதற்கு மோட்டார் வாகனமொன்றை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஓர் உத்தியோகத்தருக்கு.

 

4) உத்தியோகத்தர் ஒருவர் புகையிரதம் மூலமாக தனது வாகனத்தை அனுப்புகின்றபோது அவரும் அவ்வாகனத்தில் புகையிரத நிலையத்துக்குச் சென்று அதே புகையிரதத்தில் பிரயாணம் செய்தல் வேண்டும்.

 

5) இதற்காக அவரது வதிவிடத்துக்கும் புகையிரத நிலையத்துக்குமிடையிலான பயணத்திற்காக அவரால் செய்யப்பட்ட செலவுகளைப் பெற்றுக்கொள்ள அவர் உரித்துடையவராவார்.

 

கடமையின் நிமித்தம் பிரயாணம் செய்கின்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு இடைநிகழ்வுச் செலவுகள் எவ்வாறு வழங்கப்படும்? 

தனது வதிவிடம் புகையிரத நிலையமொன்று அல்லது பஸ் நிலையமொன்று என்பவற்றிடையே வாகனமொன்றை உபயோகிக்க தேவைப்படுமிடத்து இடைநிகழ்வுச் செலவுகள், சுமைகூலி ஈடுசெய்வதற்காக, அத்தூரம் 1 மைலுக்கு மேற்படாததாயின் 5.00 ரூபாவையும், ஒரு மைலிலும் கூடுதலானதாயின் 10.00 ரூபாவையும் அவ்வுத்தியோகத்தருக்குக் கொடுப்பனவு செய்யலாம்.

 

அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் உடனழைத்துச் செல்கின்ற கனிட்ட ஊழியர்கள் அல்லது வேலையாட்களுக்கு எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படலாம்?

 

கீழே காட்டப்பட்டுள்ளவாறு இணைந்த படி, புகையிரத மூலமான இலவசப் போக்குவரத்து அல்லது பொது வாகனத்திற்கான போக்குவரத்துக் கட்டணம் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

ஒரு உத்தியோகத்தருக்கு நிலையமாற்றத்தின் மீதான பிரயாணச் செலவுகளில் இணைந்தபடி கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும்?

 

ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்கு இடமாற்றம் பெற்ற ஓர் உத்தியோகத்தருக்கு, உண்மையில் பிரயாணத்தில் ஈடுபட்டு, இடையில் தங்கியிருத்தல் இன்றியமையாததுமான, ஒவ்வொரு நாளைக்கும் அல்லது நாளின் ஒரு பகுதிக்கும் 

 

அ) தனக்கும் தனது மனைவிக்கும் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட தனது ஒவ்வொரு பிள்ளைக்கும் இணைந்த படியை முழுமையாகவும், 

 

ஆ) 3 மற்றும் 12ற்கு இடைப்பட்ட வயதையுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் இணைந்த படியின் அரைவாசியையும் பெறலாம். 

 

இ) 21 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது 3 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை தொடர்பில் இணைந்தபடி செலுத்தப்பட மாட்டாது.

 

ஈ) உண்மையில் பிரயாணத்தில் ஈடுபட்டதும் தேவைக்கேற்ப இடைவழியில் தரித்திருக்க நேரிட்டதுமான காலத்திற்காக, அனுமதிக்கத்தக்க வேலையாட்களுக்கும் ஒரு பணிப் பெண்ணுக்கும் இணைந்த படியைக் கோரவும் அவருக்கு முடியும். 

 

பிரயாணச் செலவினங்களை எதிர்கொள்வதற்குரிய முற்பணங்களுக்கான அதிகாரம் எவ்வாறு வழங்கப்படுகின்றது?

அ) பிரயாணச் செலவினங்களை எதிர்கொள்வதற்காக முற்பணங்களை வழங்குவதற்குத் தேவையான அடையாள நிதி ஒதுக்கீடுகள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் வருடாந்த மதிப்பீடுகளினூடாக வழங்கப்படுகின்றன.

 

ஆ) இவ்வொதுக்கீட்டின் கீழ் முற்பணங்களை வழங்குவதற்கு, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் விநியோகிக்கப்படுகின்ற சுற்றறிக்கையொன்றினூடாக திணைக்களத் தலைவரொருவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

 

கடமைப் பிரயாணச் செலவுக்காக ஒரு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட முற்பணம் எவ்வாறு தீர்வு செய்யப்படுகின்றது?

 

அவர் பெற்றுக்கொண்ட முற்பணத்தொகைக்கான பிரயாணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்படுகின்ற பிரயாணச்செலவுக் கோரிக்கைப் படிவத்திலுள்ள பணத்தைப் பெற்றுக்கொள்கின்ற போது முற்பணம் அறவீடு செய்யப்படுகின்றது. 

 

பிரயாண முற்பணம் வழங்கப்படுவதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

1) இம்முற்பணத் தொகையைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுவது, பிரயாணச் செலவு பெறுவதற்கு உரித்துடையவரான உத்தியோகத்தரொருவருக்கு மாத்திரமே ஆகும்.

 

2) முற்பணம் வழங்கப்பட வேண்டியது, பயணம் தொடங்கவுள்ள தினத்திற்கு முந்திய வேலை நாளிலேயே ஆகும்.

 

3) அம்முற்பணம் பயணத்தில் ஏற்படக்கூடிய செலவினை விஞ்சலாகாது.

 

4) இடமாற்றமொன்றைப் பெற்றுள்ள எவரேனுமோர் உத்தியோகத்தர் தனது குடும்பத்தினர்களை ஒரு நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்குக் கூட்டிச் செல்வதற்காக அத்தகைய முற்பணம் ஒன்றினைப் பெற்றுள்ள போது, அம்முற்பணத் தொகையைப் பெற்று ஒரு மாத காலத்திற்குள் அவர் அவர்களை அழைத்துச் செல்லல் வேண்டும்.

 

5) அவர் அவ்வாறு செய்யத்தவறின் ஒருமாதம் கடந்ததன் பின்னர், அவர் அப்பணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும். இடமாற்றத்துக்கெனக் குறித்தொதுக்கப்பட்டுள்ள திகதியிலிருந்து 10 நாட்களுக்கு முன்னதாக இம்முற்பணம் வழங்கப்படலாகாது.

பிரயாண முற்பணம் வழங்கப்பட்டமைக்கான பதிவுகளும் அறவீடுகளும் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன?  

 

அ) வழங்கப்பட்ட முற்பணங்கள், அறவிடப்பட்ட தொகைகள் மற்றும் ஏனைய ஏற்புடைய விபரங்கள் தொடர்பான போதிய பதிவுகள் இம்முற்பணங்களை வழங்கும் பொறுப்புடைய உத்தியோகத்தர் பேணப்படுகின்றது.

 

ஆ) செலுத்தப்பட்ட முற்பணத்தொகைக்குரிய பிரயாணம் தொடர்பில் உத்தியோகத்தர் சமர்ப்பிக்கின்ற பிரயாணச் செலவுக் கோரிக்கைப் படிவத்துக்குப் பணம் செலுத்தப்படுகின்ற பொழுது அம்முற்பணத் தொகை முழுமையாக அறவிடப்படும்.

 

இ) முற்பணத்தைப் பெற்று ஒரு மாத காலத்திற்குள் உரிய பிரயாணம் மேற்கொள்ளப்படாமலும், பிரயாணச் செலவுக் கோரிக்கைப் படிவம் சமர்ப்பிக்கப்படாமலும் இருக்குமிடத்து அம்முற்பணத்தொகை உத்தியோகத்தரின் சம்பளத்திலிருந்து ஒரே முறையில் முழுமையாக அறவிடப்படல் வேண்டும். தவணைமுறையில் அறவீடு செய்யப்பட அனுமதிக்கப்பட மாட்டாது.

 

ஈ) மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் இம்முற்பணத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை நீடிக்கச் செய்ய தனிப்பட்ட முறையில் திணைக்களத் தலைவருக்கு முடியும். எவ்வாறிருப்பினும் எச்சந்தர்ப்பத்திலும், அக்காலத்தை முற்பணம் வழங்கப்பட்ட நாள் முதல் மூன்று மாதங்களுக்கு அப்பால் நீடிக்கச் செய்தலாகாது.

 

உ) அவ்வாறு நீடிக்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் முற்பணத்தைத் தீர்க்கத் தவறின் அம்முற்பணத்தை அறவிடுவதற்காக மேற்கொள்ளப்படக்கூடிய ஏதேனும் நடவடிக்கைக்கு மேலதிகமாக உத்தியோகத்தர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் ஆளாதல் வேண்டும்.

 

ஊ) முந்திய முற்பணத் தொகையெதுவும் ஏதும் அறவிடப்படாதிருக்குமிடத்து, உத்தியோகத்தர்ருக்கு மீண்டும் முற்பணத் தொகையொன்று வழங்கப்படுதலாகாது. எவையேனும் விசேட காரணங்களுக்காக இவ்விதியினைத் தளர்த்த வேண்டி நேரிடுமிடத்து, திணைக்களத் தலைவரின் தனிப்பட்ட அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.

திணைக்களப் பரீட்சையொன்றிற்குத் தோற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிரயாணச் செலவு வழங்கப்படுவதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக?

 

1) கொழும்பில் அல்லது வேறேதேனும் நிலையமொன்றில் திணைக்களப் பரீட்சையொன்றிற்குத் தோற்றும் உத்தியோகத்தரொருவருக்கு அவர் முழுப் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளாரென்பதற்கான திருப்திகரமான எண்பிப்பை சமர்ப்பிப்பாராயின், எதேனுமொரு பரீட்சை தொடர்பில் ஒருமுறை மாத்திரம் பிரயாணச் செலவுகளைப் பெறுவதற்கு அவர் உரித்துடையவராவார்.

 

2) இவ்வாறு கொடுப்பனவு செய்யமுடிந்த பிரயாணச் செலவுகளில் பொது வாகனமொன்றுக்கு உண்மையில் கொடுப்பனவு செய்யப்பட்ட கட்டணமும் கொடுப்பனவு செய்ய முடிந்த இணைந்த படியும் உள்ளடங்கும்.

 

3) புகையிரத சேவை வசதிகளிருப்பின், புகையிரதத்திலேயே பிரயாணம் செய்தல் வேண்டும்.

 

4) இந்நோக்கத்துக்காக அவருக்குப் புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படலாகாது. ஆனால் அவர் தனது சொந்தக் கட்டணத்தைச் செலுத்திச் செல்லுதல் வேண்டும். அவர் பரீட்சையில் சித்திபெறுமிடத்து அல்லது மேலே குறிப்பிடப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுமிடத்து அக்கட்டணம் மீளளிக்கப்படும்.

 

5) சகல பிரயாணச் செலவுக் கோரிக்கைப் படிவங்களும் பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்பட்டு முப்பது நாட்களுக்குள் முன்வைக்கப்படல் வேண்டும்.

 

6) இவ்வொழுங்குவிதிகள் எவ்வகையிலும் போட்டிப் பரீட்சையொன்றிற்கு ஏற்புடைத்தாகா. போட்டிப்பரீட்சைகள் சார்பாக இலவச போக்குவரத்து வசதி வழங்கலோ, பிரயாணச் செலவு மீளளிப்போ மேற்கொள்ளப்படமாட்டாது.