DO III Past Paper

Thursday, September 9, 2021

வினாவிடைகள் தொடர் 21 - விடுமுறைகள் - E Code Question and Answer 21



வினா: சாதாரண விடுமுறை விண்ணப்பமானது விடுமுறை ஆரம்பிக்கும் திகதிக்கு ஆகக் குறைந்தது எத்தனை நாட்களுக்கு முன்னர் விடுமுறை அனுமதிக்கும் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்? 

 

விடை: லீவு ஆரம்பிக்கப்படும் திகதிக்கு ஆகக் குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னராவது விண்ணப்பத்தினை லீவை அனுமதிக்கும் அதிகாரியின் அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டும். 

 

வினா: நாட்டிற்கு வெளியே செலவிடப்படுகின்ற காலப் பகுதிக்கான லீவுகளுக்காக அனுப்பப்படும் விண்ணப்பப் படிவமொன்று எத்தனை நாட்களுக்கு முன்னர் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்? 

 

முடியுமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த லீவு ஆரம்பிக்கப்படும் திகதிக்கு மூன்று மாதங்களுக்குக் குறையாத காலத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

வினா: மிகவும் அவசர சந்தர்ப்பம் ஒன்றில் அலுவலர் ஒருவருக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாததொரு நேரத்தில் விடுமுறையை அறிவிக்கும் விதம் தொடர்பாக வெளியிடப்பட்ட 24/2013ம் இலக்க சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென்ன?

 

மிகவும் அவசர சந்தர்ப்பம் ஒன்றில் அலுவலர் ஒருவருக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாததொரு நேரத்தில் அதனை ரெலிமெயில் தொலைபேசிச் செய்தி! குறுஞ்செய்திச் சேவை (SMS)/ மின் அஞ்சல் (e-Mail) மூலம் தனது திணைக்களத் தலைவருக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் கடமைக்குச் சமூகமளித்தவுடன் உடனடியாக உரிய விண்ணப்பம் ஒன்றின் மூலம் விடுமுறைக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும். (24/2013)

 

வினா: அனுமதிக்கப்பட்ட லீவுகள் தொடர்பான பதிவுப் புத்தகம் ஒன்றினை பேணும் படிவம் எது?

பொது 190 படிவம்

 

வினா: பொதுவாக செலுத்தப்படுகின்ற பதில் கடமைக்கான சம்பளத்தை அல்லது மேலதிக ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையொன்றில்லாத பதில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து லீவுகள் தொடர்பாக எவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படும்?

 

பொது 196 ஆம் படிவத்தில் பதிவு செய்து மாதாந்தம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

 

வினா: உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுமிடத்து, அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர் தொடர்பாக திணைக்களத்தின் தலைவர் புதிய திணைக்களத்தின் தலைவருக்கு அனுப்ப வேண்டிய விடுமுறை தொடர்பான தகவல்கள் யாவை? 

 

அ) உத்தியோகத்தர் தனது முதல் நியமனத்திலிருந்து ஒவ்வோராண்டிலும் பெற்றுக்கொண்டுள்ள மொத்த ஓய்வு பிணி லீவுகளின் எண்ணிக்கை, 

ஆ) அரைச் சம்பள லீவுகளின் எண்ணிக்கை,

இ) சம்பளமற்ற லீவுகளின் எண்ணிக்கை,

ஈ) குறித்த வருடத்தினுள் அவர் பெற்றுள்ள மொத்த அமய லீவுகளின் எண்ணிக்கை

 

வினா: விடுமுறைகளை கணிக்கும் போது சனி, ஞாயிறு, பொதுவிடுமுறை தினங்களை கணித்தல் தொடர்பான ஏற்பாடுகளை குறிப்பிடுக.

அ) அமய லீவுகளைக் கணிப்பிடும் போது சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களை கவனத்தில் கொள்ளக் கூடாது. 

 

ஆ) ஓய்வு லீவுகளை நாட்டிற்கு வெளியே கழிக்குமிடத்து, அவரது லீவு காலப் பகுதியினுள் வருகின்ற சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் அதில் உள்ளடக்கப்படும்.

 

இ) அரைச் சம்பள விடுமுறைகள் அல்லது சம்பளமற்ற விடுமுறைகள் எடுக்க ப்படுகின்ற காலப்பகுதியினுள் வருகின்ற சனிக்கிழமையொன்று, ஞாயிற்றுக்கிழமையொன்று அல்லது அரசாங்க விடுமுறை நாளொன்று என்பவற்றை முறையே அரைச் சம்பள அல்லது சம்பளமற்ற நாட்களாகக் கணிப்பிடல் வேண்டும்.

 

ஈ) தற்போது வாரமொன்றிற்கு ஐந்தரை நாட்கள் (5 1/2) சேவையாற்ற வேண்டுமென்று நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் சனிக்கிழமையில் விடுமுறை பெறுகின்ற சந்தர்ப்பங்களில் அந்த நாளுக்காக கழித்துக் கொள்ள வேண்டியது, அவர்களுக்குரிய வருடாந்த விடுமுறைகளிலிருந்து 1/2 நாளை மாத்திரமேயாகும்.

 

வினா: கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாளின் ஒரு பகுதியாக விடுமுறை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

அ) உத்தியோகத்தர் ஒருவர் தனது மதிய உணவுக்கான நேரம் தவிர்ந்த ஆகக் குறைந்தது மூன்றரை மணித்தியாலயங்கள் சேவையாற்றியதன் பின்னர் குறித்த நாளின் ஏனைய காலப் பகுதிக்கு லீவு பெற்றிருப்பின், அந்நாளுக்குரிய அவரது லீவானது அரைநாள் லீவாக கொள்ளப்படல் வேண்டும்.

 

ஆ) அம்மூன்றரை மணித்தியாலங்களுக்குக் குறைவாகப் பணியாற்றியிருப்பின் அதனை ஒருநாள் லீவாகக் கொள்ளல் வேண்டும்.

 

இ) ஒரு நாளில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு உட்பட்ட நேரம் விடுமுறை பெற்றிருப்பின் அது குறுகிய கால விடுமுறையாக கொள்ளப்படும். இவ்விடுமுறை மாதத்தில் இரண்டு நாட்களில் மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். 

வினா: உள்நாட்டிலே கழிப்பதற்காக வழங்கப்படும் அமைய லீவானது எத்தனை நாட்களாகும்?

 

ஒரே தடவையில் 06 நாட்களுக்கு மேற்படாதவாறு ஒருவருட காலப்பகுதியில் ஆகக் கூடியது 21 நாட்கள் அமய லீவினை அனுமதிப்பதற்கு திணைக்களத் தலைவருக்கு முடியும். 

 

வினா: அமைய லீவு என்ன காரணத்துக்காக வழங்க முடியும்?

வெறுமனே அமய ரீதியான விடயங்கள் காரணமாக குறுகிய காலப் பகுதியொன்றிற்கு கடமைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு அமைய லீவு வழங்கப்படும்.

 

வினா: நோய்காரணமாக ஓர் உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு இரண்டு நாட்களுக்கு மேல் வரமுடியாதவிடத்து, குறித்த உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை யாது? 

 

அ) அவ்வுத்தியோகத்தர் அருகிலுள்ள அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் ஒருவர் மூலம் தம்மைப் பரிசோதித்துக் கொள்ளல் வேண்டும்.

ஆ) அரசாங்க மருத்துவ உத்தியோத்தரொருவரால் பரிசோதிக்கப்படுமிடத்து அந்த மருத்துவ உத்தியோகத்தர் மருத்துவப் படிவம் 170  அல்லது ஆயுர்வேதப் படிவம் 44 இனால் ஆன சான்றிதழ் ஒன்றை அவ்வுத்தியோகத்தர் பணி புரிகின்ற திணைக்களத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

இ) அல்லது உத்தியோகத்தர் ஆயுர்வேதச் சட்டத்தின் கீழ் அல்லது மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தனியார் மருத்துவத் தொழில் புரிபவரினால் பரிசோதிக்கப்படுமிடத்து அத்தகைய மருத்துவத் தொரில்புரிநர் தானே தயாரித்துக் கொண்ட விஷேட படிவமொன்றிலான மருத்துவச் சான்றிதழ் ஒன்றை அவ்வுத்தியோகத்தர் பணி புரிகின்ற திணைக்களத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

வினா: பிணி காரணமாக பெற்றுக் கொள்ளப்படுகின்ற லீவினை அமைய லீவுகளில் கழித்துக் கொள்ள முடியுமா?

 

பிணி காரணமாக ஒரு தடவையில் ஆறு நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குப் பெறப்படுகின்ற குறுகிய கால லீவு உத்தியோகத்தரின் விருப்பத்திற்கிணங்க அவரின் அமய லீவுகளிலிருந்து கழிக்கப்பட முடியும்.

 

வினா: உத்தியோகத்தர் பெற்றுள்ள விடுமுறைக்கு மருத்துவ சான்றிதழ் (Medical Certificate) அவசிமற்றது என கருதக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றில் திணைக்களத்தலைவர் மருத்துவச் சான்றிதழ் கோரலாமா?

 

திணைக்களத் தலைவரொருவருக்கு உத்தியோகத்தரொருவரின் லீவு தொடர்பில் வழமையான சூழ்நிலைகளின் கீழ் மருத்துவச் சான்றிதழொன்று அவசியமற்ற சந்தர்ப்பமொன்றில் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தரிடமிருந்து மருத்துவச் சான்றிதழொன்று தேவையென தெரிகின்றவிடத்து அத்தகைய சான்றிதழொன்றை சமர்ப்பிக்குமாறு கோர அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

 

வினா: பதில் லீவு வழங்கப்படும் நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

அ) உத்தியோகத்தர் ஒருவர் ஏதேனுமொரு அரச விடுமுறை தினத்தில் அல்லது “வார ஓய்வு நாளொன்றில்” கடமையாற்ற வேண்டும் என திணைக்களத் தலைவர் கருதுமிடத்து, அதற்குப் பதிலாக அவருக்கு பதில் லீவினை திணைக்களத் தலைவர் வழங்க முடியும்.

 

ஆ) மேற்படி லீவானது உத்தியோகத்தர் உண்மையாகவே பணியாற்றிய மணித்தியாலங்களுக்கு மாத்திரமே அனுமதிக்கப்படல் வேண்டும்.

 

இ) விடுமுறை நாளொன்றில் பணியாற்றி உழைக்கின்ற பதில் லீவினை, அவ்விடுமுறை நாளிலிருந்து ஒரு வருட காலத்தினுள் பெற்றுக் கொள்ளல் வேண்டுமென்பதோடு, ஒரு வருடத்தின் பின்னர் பதில் லீவு இரத்தாகிவிடும்.

 

உ) நாட்டிற்கு வெளியே கழிக்கின்ற எவ்வகையான லீவுடனும் பதில் லீவினைச் சேர்த்து எடுக்க முடியாது.