DO III Past Paper

Thursday, September 16, 2021

மேலதிக நேரப் படிகள் - வினாவிடைகள் 27 Over Time Payments



நிதி ஏற்பாடு மற்றும் மேலதிக நேரப் படிகள் தொடர்பிலான நிதியினைச் செலவிடுவதற்கான அங்கீகாரம் எந்த அமைச்சினால் வழங்கப்படும்?

நிதி அமைச்சினால் (Ministry of Finance)

திறைசேரியிடம் வினவாது மேலதிக நேரப் படியொன்றினை வழங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எவை?

அ) மேலதிக நேரப் படிகள் தொடர்பிலான நிதியினை செலவிடுவதற்கு மதிப்பீடுகளில் கட்டாயமாக நிதி ஏற்பாடுகள் (Allocation) செய்யப்பட்டிருந்தால் மற்றும் 

ஆ) செலுத்துவதற்குத் தேவையான நிதியும் காணப்பட்டுமிருந்தால் மாத்திரமேயாகும்.

 

முற்பணக் கணக்குகள் மற்றும் ஏனைய அறவீடுகள் என்பனவற்றிலிருந்து நிதி வழங்கப்படும் பணிகளுக்காக மேலதிக நேரப் படிகள் தொடர்பில் செலவிடக் கூடிய நிதியின் அளவினை யார் தீர்மானிக்க வேண்டும்?

வரவுசெலவுத் திட்டப் பணிப்பாளர் நாயகம்.

 

மேலதிக நேர பணிக் கட்டுப்பாடு தொடர்பாக திணைக்களமொன்றினால் எடுக்கக்கூடிய நடைமுறைகளை குறிப்பிடுக.

 

அ) போதிய அளவில் மேலதிக நேரப் பணியை உண்மையாகவும், நியாயமாகவும் ஆற்றியுள்ளாராவென திணைக்களத் தலைவர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து திருப்தி அடைதல் வேண்டும்.

ஆ) இப்பணியில் நிர்ணயிக்கப்பட்டளவு சேவையாற்றப்படுவதை பார்த்துக் கொள்வதற்காக உரிய பரிசீலனை மற்றும் அறிக்கைகளைப் பேணி வருவதற்கான முறையொன்றினை வகுத்துக் கொள்ளல் வேண்டும்.

மேலதிக நேரப் படிகள் வழங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எவை?

 

அ) குறித்த பணியினை நிறைவேற்றுவதற்கு வேறு எவ்வழியும் இல்லாத அதிவிசேட சந்தர்ப்பங்களில்,

ஆ) குறிப்பாக விதித்துரைக்கப்பட்டுள்ளவையும், வழமையான கடமைகளிலிருந்து முற்றிலும் புறம்பானவையும், அவசரமானவையும், வழமையான கடமை நேரத்தில் மேற்கொள்ள முடியாதவையுமான வேலைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள், 

இ) அவசரமாக நிறைவேற்ற வேண்டிய விசேட பணியொன்றை நிறைவேற்றுவதற்காக குறிப்பிடத்தக்களவு காலத்திற்கு அதிகமான மணித்தியாலங்கள் மேலதிக நேரம் பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்களில் , 

மேலதிக நேரப் படிகள் வழங்க முடியும்.

 

மேலதிக நேரப் படிகள் வழங்க முடியாத சந்தர்ப்பங்கள் எவை? 

அ) திணைக்களமொன்றின் சாதாரண விடயப் பரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள வேலைகளுக்கும் 

ஆ) உத்தியோகத்தர் ஒருவரின் கவனயீனம் காரணமாக அல்லது அலுவலக முறைமை பேணப்படாமையால் அல்லது அலுவலக முறைமைகளைத் தட்டிக்கழித்தமையால் உரிய நேரத்திற்கு ஆற்ற முடியாமல் ஒன்று சேர்ந்த பணிகளுக்கும் 

இ) அவசர சந்தர்ப்பம் ஒன்றின்போது ஒருசில மணித்தியாலங்கள் மேலதிகமாகப் பணியாற்றுமாறு ஓர் உத்தியோகத்தர் பணிக்கப்பட்டுள்ளவிடத்து, 

ஈ) உத்தியோகத்தர் ஒருவர் விடுமுறையில் சென்று, அல்லது பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்ட ஒரே காரணத்திற்காக அப்பதவியின் பணிகளை மேற்கொள்வதற்காக

உ) கடமைக்குச் சமுகமளிக்காத உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை ஏனைய உத்தியோகத்தர்கள் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு

மேலதிக நேரப் படிகள் வழங்க முடியாது.

மேலதிக நேர படிகள் கொடுப்பனவுக்காக கணக்கிடப்பட வேண்டிய கால எல்லைகள் எவை? 

 

அ) வழமையான கடமை நேரங்களுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட வேலைகளுக்காக மேலதிக நேரக் கொடுப்பனவைச் செலுத்த முடியும்.

ஆ) நாளுக்குரிய முழுக் கடமை நேரத்திலும் உத்தியோகத்தர் பணியாற்றியிருத்தல் வேண்டும். 

இ) யாதேனுமொரு நாளில் தாமதமாக வேலைக்கு வந்தமையால் அல்லது அரைநாள் விடுமுறை, விசேட விடுமுறை விடுமுறை காரணமாக இழக்கப்பட்ட காலத்தை அந்த நாளில் பணிபுரிந்த மேலதிக நேரத்திலிருந்து கழித்துவிட்டு எஞ்சிய காலத்தை மாத்திரமே கணக்கிட வேண்டும்.

இ) ஒரு தடவையில் அரை மணித்தியாலத்திற்குக் குறைந்த காலத்திற்காக அல்லது ஒரு நாளில் மொத்தமாக ஒரு மணித்தியாலத்திற்குக் குறைந்த காலத்திற்காக மேலதிக நேரப்படியினைச் செலுத்தலாகாது. 

ஈ) ஒரு தடவையில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக வேலையின் மொத்த அளவினைக் கணக்கிடும் போது ஒரு மணித்தியாலத்தில் நான்கில் ஒரு பகுதிக்குக் குறைந்த பகுதியினைக் கணிப்பிடலாகாது.

உ) வழமையான கடமை நேரத்திற்குப் புறம்பாக கடமைக்காகப் பயணிக்கும் காலத்தினை, அவ்வாறு பயணிப்பது கடமையினை நிறைவேற்றுவதில் ஓர் அங்கமாகக் காணப்படுமிடத்து மேலதிக நேரப்படிக்காக கணக்கிட முடியும்.

ஊ) இவ்வாறு பிரயாணம் செய்யும் போது இடையிடையே மாத்திரம் வேலை ஏற்படுமிடத்து அதனைக் காத்திருத்தல் கடமையாகக் கருதி, அந்தக் காலத்தில் அரைப்பகுதியை மாத்திரம் கணக்கிடல் வேண்டும்.

எ) காத்திருத்தல் கடமையின் கீழ் செலவிடுகின்ற காலத்தைக் கணிப்பிடும் போது அரை மணித்தியாலத்திற்குக் குறைந்த காலத்தினைக் கணிப்பிடலாகாது

வாரத்தை அடிப்படையாக கொண்டு கடமை நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேலதிக கடமை நேரம் எவ்வாறு கணிக்கப்படும்? 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மேலதிக நேரத்தைக்கணிப்பிட வேண்டியது வாரத்திற்கென விதிக்கப்பட்டுள்ள மணித்தியாலங்களிலும் பார்க்க மேலதிகமாகப் பணியாற்றுகின்ற மணித்தியாலங்களை அடிப்படையாகக் கொண்டேயாகும்.

 

மேலதிக நேர கடமைக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டண அளவு எவ்வாறு கணக்கிடப்படும்? 

 

அ) சாதாரண கட்டணத் தொகை – ஒரு மணித்தியாலத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய சாதாரண மேலதிக நேரப்படியின் அளவு ஒருநாள் சம்பளத்தின் எட்டிலொரு (1/8) பகுதியாகும். மாதாந்த சம்பளம் பெறும் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் ஒருநாள் சம்பளத்தைக் கணக்கிட வேண்டியது திரண்ட மாதாந்த சம்பளத்தில் முப்பதில் ஒன்று (1/30) என்ற வகையிலாகும்.

ஆ) காத்திருத்தல் கடமைக்கான கட்டணத் தொகை – காத்திருக்கும் கடமைகளுக்காக மேலதிக நேரப்படி செலுத்தப்பட வேண்டியது சாதாரணக் கட்டணத்தில் அரைவாசி என்ற விகிதத்திலாகும். 

 

காத்திருத்தல் கடமை என்பதன் மூலம் கருதப்படுவது யாது?

குறிப்பிடத்தக்களவு வேலையொன்று காணப்படாத போதிலும், யாதேனுமொரு காலப்பகுதிக்குள் விதிக்கப்பட்ட சேவை நிலையமொன்றில் கடமையின் நிமித்தம் ஓர் உத்தியோகத்தர் காத்திருப்பதனைக் குறிப்பிடலாம்.

 

மோட்டார் வாகனச் சாரதி ஒருவர் தொடர்பில் “காத்திருக்கும் கடமைக் காலம்” என்பதன் கருத்து யாது? 

கடமையிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு அவருக்கு வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் தேவையேற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடமைக்கு மீள அழைக்கப்படுவதற்கு அவர் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காலத்தைக் குறிக்கும்.

விடுமுறை நாட்கள் எந்த சட்டத்தின் கீழ் கணிக்கப்படுகின்றன?

1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் கீழ் 

 

அரசாங்க விடுமுறை நாட்கள் எவை?

அ) ஞாயிற்றுக் கிழமை பௌர்ணமி போயா தினங்கள் மற்றும் சட்டத்தின்கீழ் வெளியிடப்படுகின்ற ஏனைய அரசாங்க விடுமுறை நாட்கள்.

ஆ) இந்நியதிச் சட்டம் தொடர்பான பணிகளுக்காக பொதுவாக ஞாயிற்றுக் கிழமை தினத்தை “வார ஓய்வு நாளாகக் கருதுதல் வேண்டும். 

இ) அரசாங்க விடுமுறை நாட்களாகக் கொள்ளப்பட வேண்டியவை பௌர்ணமி போயா தினங்கள் மற்றும் சட்டத்தின் கீழ் வெளியிடப்படுகின்ற ஏனைய விடுமுறை நாட்கள் என்பனவாகும்.

 

தனது சேவை நிபந்தனையின் பிரகாரம் அரசாங்க விடுமுறை நாளொன்றில் பணியாற்ற வேண்டியுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு அரசாங்க விடுமுறை நாளொன்றில் பணியாற்றியமைக்காகப் விடுமுறை நாட் சம்பளம் வழங்கப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை?

 
அ) அவர் நாட்சம்பளத்தைப் பெறுபவராயின், அரசாங்க விடுமுறை நாளொன்றுடன் அதற்கு முன்னடுத்த அல்லது பின்னடுத்த வேலை நாளில் கடமைக்கு சமுகமளித்துள்ளாராயின், அவருக்கு ஒருநாள் சம்பளம் வழங்கப்படுதல் வேண்டும்.
 
ஆ) அரசாங்க விடுமுறை நாளுக்கு முன்னரும் பின்னரும் வருகின்ற இரண்டு வேலை நாட்களிலும் இவர் சுகயீன விடுமுறை, அல்லது சம்பளமற்ற விடுமுறையில் இருந்திருப்பின் அந்த அரசாங்க விடுமுறைக்காக அவருக்கு ஒருநாள் சம்பளம் உரித்தற்றதாகும்.
 
இ) எனினும், சம்பளத்துடனான விடுமுறை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராயின், கடமைக்குச் சமுகமளிக்காத அத் தினத்தை சம்பளத்துடனான விடுமுறை நாளாக கருத முடியும். அவர் மாதாந்த சம்பளம் பெறுபவராயின், எதுவித மேலதிகக் கொடுப்பனவும் அவருக்கு உரித்துடையதன்று.
 
ஈ) பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர், வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் அல்லது மேலதிக நேரப்படியினைப் பெறுவதற்கு உரித்தற்ற வேறோர் உத்தியோகத்தர் அரசாங்க விடுமுறை நாள் ஒன்றிலே பணியாற்றுமிடத்து, அவர் அதற்குப் பதிலாக ஒருநாள் பதில் விடுமுறையினை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.