DO III Past Paper

Friday, September 17, 2021

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளங்கள் வினாவிடைகள் 28 Salaries for Public Officers



அந்தந்த பதவிகளுக்குரிய அல்லது தரங்களுக்குரிய அரச சேவையின் தற்கால சம்பளக் கட்டமைப்பினுள் சம்பள அளவுத் திட்டங்களை நிர்ணயிப்பவர் யார்?

தாபனப் பணிப்பாளர் நாயகம்,

அரச ஊழியர்களின் புதிய சம்பளங்களின் அளவுத் திட்டங்களைத் தயாரிக்கின்ற பொறுப்பு யாரைச் சார்ந்தது?

நிதியமைச்சையே சார்ந்தது.

 

புதிய பதவி ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் (New Salary)  அல்லது சம்பள அளவுத்திட்டமொன்று பற்றித் தீர்மானித்தல், யாரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்?

பொதுத் திறைசேரியினதும் தாபனப் பணிப்பாளர் நாயகத்தினதும் இணக்கப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்படும்.

 

யாதேனுமொரு சம்பளத்தை திருத்தியமைத்துள்ள (Salary Conversion) சந்தர்ப்பத்தில் பொதுவாக திருத்தம் செய்யப்பட்ட சம்பளமானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது எத்தினத்திலாகும்?

குறித்த திருத்தம் கட்டளையிடப்பட்ட தினத்திலிருந்து

 

லீவு பெற்றுக்கொள்ளாது கடமைக்கு சமுகமளிக்காத அரச உத்தியோகத்தருக்கு சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடு யாது? 

கடமைக்கு சமூகமழிக்காத காலமொன்று தொடர்பாக அரச உத்தியோகத்தர் ஒருவருக்கெதிராக மேற்கொள்ளப்படக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எதுவாக இருந்த போதிலும் அவருக்கு குறித்த காலப் பகுதிக்காக எவ்வித சம்பளமும் வழங்கக் கூடாது.

தனது பதவியை விட்டு விலகிச் சென்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடு யாது? 

பதவியை விட்டு விலகிய தினத்திலிருந்து எவ்வித சம்பளத்தையும் பெறுவதற்கு உரித்துக் கிடையாது. அவ்வாறே அவருக்குச் செலுத்த வேண்டிய ஏதேனுமொரு தொகையிலிருந்து அவர் முன்கூட்டியே அறிவிக்காமைக்காக ஒருமாதச் சம்பளத்திற்குச் சமமான ஒரு தொகையினை அறவிட்டுக் கொள்ளல் வேண்டும்.

 

மாதச் சம்பளமொன்று உரித்துள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு வருடத்தில் ஏதாவதொரு மாதத்தின் சம்பளம் எவ்வாறு கணிக்கப்படும்? (Monthly Salary) 

உத்தியோகத்தர் ஒருவரின் வருடாந்த சம்பளத்தை 12 சம பகுதிகளாகப் பிரிக்கும் போது வரும் தொகையொன்றை குறித்த உத்தியோகத்தரின் ஒரு பஞ்சாங்க மாதத்திற்குரிய சம்பளமாகக் கணித்தல் வேண்டும்.

 

ஒரு உத்தியோகத்தரின் சம்பளமற்ற விடுமுறை காலப் பகுதியொன்று அரசாங்க விடுமுறை நாளொன்றுக்கு அடுத்த நாளில் இருந்து தொடங்கும் போது அல்லது அரசாங்க விடுமுறை நாளொன்றிற்கு முன்னைய நாளில் முடிவடையும் போது, சம்பளமற்ற விடுமுறை காலம் எவ்வாறு கணக்கிடப்படும்? (No Pay Leave)

சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அந்த விடுமுறைக் காலப் பகுதிக்கு  அடுத்த நாளில் குறித்த உத்தியோகத்தர் கடமையாற்றியிருப்பின் குறித்த அரசாங்க விடுமுறை நாளை அந்த விடுமுறை காலப் பகுதிக்குள் உட்படுத்தலாகாது.

உதாரணம்:  “ஏ” என்பவர் 2009.12.31 ஆந் திகதி கடமைக்கு சமுகமளித்தார். அவர் 2010.01.02 ஆந் திகதி முதல் சம்பளமற்ற விடுமுறையில் கடமைக்கு சமுகமளிக்காதிருந்து விட்டு 2010.01.12 ஆந் திகதி மீண்டும் கடமைக்கு வருகிறார். 2010.01.01 ஆந் திகதி மற்றும் 2010.01.11 ஆந் திகதி ஆகிய தினங்கள் விடுமுறை நாட்களாகும். சம்பளமற்ற லீவுக் காலப்பகுதி 2010.01.02 ஆந் திகதி முதல் 2010.01.10 ஆந் திகதி வரையிலான (மேற்படி இரண்டு நாட்களும் நீங்கலாக) 9 நாட்களாகும்.

ஒரு பதவியில் முதல் நியமனத்தின் போது வழங்கப்படும் சம்பளம் யாது?

யாதேனுமொரு பதவிக்கு உத்தியோகத்தர் ஒருவர் முதலாவது நியமனம் பெறும் போது அப்பதவிக்குரிய சம்பள அளவுத்திட்டத்தின் ஏதேனுமொரு படிமுறையில் வைப்பதற்கு அவருக்கு உரித்தின்றேல் அவரைக் குறித்த சம்பள அளவுத் திட்டத்தின் ஆரம்பப் படிமுறையில் வைத்தல் வேண்டும்.

 

விடுமுறை நாள் சம்பளத்தைப் (Holiday Pay) பெறுவதற்கு உரிமையுள்ள அலுவலர் ஒருவர் அரசாங்க விடுமுறை நாளொன்றிலே கடமையின் நிமித்தம் பயணம் செய்தால் அதற்கான கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படும்?

அது விடுமுறை நாள் சம்பளத்தைப் பெறுவதற்கான பயணம் ஒன்றாகக் கணிக்கப்படலாகாது. எனினும், குறித்த கடமை ஒன்றினை நிறைவேற்றுவதற்காகவே அந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாயின், அதற்காகப் பதில் விடுமுறை வழங்க முடியும்.

 

விடுமுறை நாள் சம்பளமானது எந்த ஒதுக்கீட்டின் கீழ் பற்று வைக்கப்படும்?

அ) மேலதிக சம்பளம், மேலதிகநேரப் படிகள் மற்றும் விடுமுறை நாட்சம்பளம் என்பவை உள்ளடக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் கீழேயே பற்று வைக்கப்படல் வேண்டும். 

ஆ) எனினும் விடுமுறை நாளுக்காக சம்பளம் பெறுவதற்கு உரித்துடைய யாரேனுமோர் உத்தியோகத்தருக்கு அரசாங்க விடுமுறை நாளொன்றிலே தனது சாதாரண கடமைக்குப் புறம்பாக பணியாற்றுமாறு உத்தரவிட்டிருப்பின், அந்த மேலதிக மணித்தியாலங்களுக்கான மேலதிக நேரப்படியினைச் செலுத்த வேண்டியதுடன், அந்தச் செலவினை சாதாரண மேலதிகக் நேரப்படிக்கான ஒதுக்கீடுகளிலேயே பற்று வைத்தல் வேண்டும்.

எவ்வாறான சேவை நிலையங்களில் கடமையாற்றுபவர்களுக்கு வேலை நிலையப் படி வழங்கப்பட வேண்டும்? (Work Station Allowance)

கடல் மட்டத்திலிருந்து 5000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அமையப் பெற்றுள்ள சேவை நிலையங்களில் பணியாற்றுகின்ற ஒவ்வோர் உத்தியோகத்தருக்கும் வேலை நிலைப்படியொன்றாக அவரின் இணைந்த சம்பளத்தில் 8% இனை செலுத்துதல் வேண்டும். 

 

சம்பள அளவுத்திட்டம் ஒன்றின் மீளாய்வின் (Salary Reconciliation) போது வழங்கப்படும் சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படும்?

அ) சம்பளத்தை மாற்றும் போது உத்தியோகத்தர் முன்னைய சம்பள அளவுத் திட்டத்திற்கேற்ப இறுதியாகப் பெற்றுவந்த சம்பளமானது, புதிய சம்பள அளவுத் திட்டத்தின் சம்பளப் படிமுறைகளின் இடையே வருமாயின், அவரை புதிய சம்பள அளவுத்திட்டத்தின் அதற்கடுத்துள்ள சம்பளப் படிமுறையில் வைத்தல் வேண்டும்.

 

ஆ) சம்பள மீளமைப்பின் பின்னர், உத்தியோகத்தர் ஒருவர் இறுதியாகப் பெற்ற வேதனம் புதிய வேதன அளவுத் திட்டத்தின் வேதனப்படி ஒன்றுடன் ஒத்து இயல்வதாயின், அவ்வுத்தியோகத்தர் அதற்கு அடுத்த (மேலான) வேதனப்படியில் அமர்த்தப்படல் வேண்டும்.

இ) திருத்தம் செய்யப்படும் போது உத்தியோகத்தர் ஒருவர் இறுதியாக பெற்றுக் கொண்ட சம்பளமானது, புதிய சம்பள அளவுத் திட்டத்தின் ஆரம்பச் சம்பளத்தை விடவும் குறைவாகக் காணப்படின், அவர் புதிய சம்பள அளவுத் திட்டத்தின் ஆரம்பப் படிமுறையில் வைக்கப்படுவார்.

 

ஈ) அவரது அடுத்த சம்பள ஏற்றத் திகதியானது சம்பள அளவுத் திட்டம் திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்த திகதியாகும். (Next Increment Date)

 

சம்பள திருத்தம் செய்யப்படும் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர் ஒருவர் தனது சம்பள அளவுத் திட்டத்தின் உச்சத்தில் இருப்பாராயின், அவருக்கான சம்பள படிநிலை எவ்வாறு தீர்மானிக்கப்படும்? 

 

அ) அவருக்கு காத்திருத்தல் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான விடயத்தை குறித்த உத்தியோகத்தரின் ஒப்பீட்டு ரீதியான சேவை மூப்பு, பதவி உயர்வுக்கான சந்தர்ப்பங்கள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

ஆ) உரிய சந்தர்ப்பங்களில் திணைக்களத் தலைவர் தனது பரிந்துரையுடன் மேற்படி தகவல்களை தாபனப் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

புதிய சம்பள அளவுத் திட்டத்தினை உருவாக்கும் சந்தர்ப்பத்தில் அது தற்போது பணியாற்றுகின்ற உத்தியோகத்தர் ஒருவருக்குப் பாதகமாக அமையுமாயின், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

குறித்த உத்தியோகத்தருக்கு தனிப்பட்ட வகையில் பொருந்தத்தக்கவாறு அவரை பழைய சம்பள அளவுத் திட்டத்திலேயே வைப்பதற்கு தாபனப் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி கோரப்படுதல் வேண்டும்.

“கடைசியாகப் பெற்ற சம்பளம்” என்பதன் அர்த்தம் என்ன? (Last Pay Salary)

ஓர் உத்தியோகத்தரின் சம்பள மீளாய்வு நடைமுறைக்கு வருவதற்கு உடன் முந்திய தினத்தன்று பெற்ற சம்பளத்தைக் குறிக்குமே தவிர சம்பள மீளாய்வு பற்றி அறிவிக்கப்படும் பொழுது பெற்ற சம்பளத்தைக் குறிக்காது.

 

பதவியுயர்வின் (Promotion) போது சம்பள மாற்றம் செய்யப்படும் விதத்தினை குறிப்பிடுக?

அ) பதவி உயர்வின் மீது, உத்தியோகத்தர் கடைசியாகப் பெற்றுக்கொண்ட, புதிய சம்பள அளவுத்திட்டத்தின் சம்பளப் படிநிலைகளுக்கிடையில் வருமிடத்து, அவர் மிகக் கிட்டிய அடுத்த உயர்ந்த சம்பளப் படிநிலையில் வைக்கப்படல் வேண்டுமென்பதுடன், அவருக்கு மேலதிக சம்பள ஏற்றமொன்றும் வழங்கப்படல் வேண்டும்.

ஆ) பதவி உயர்வின்மீது, உத்தியோகத்தர் கடைசியாகப் பெற்றுக்கொண்ட சம்பளமானது, புதிய சம்பள அளவுத்திட்டத்தின் மீதான தொடக்கச் சம்பளத்திற்கு அல்லது ஒரு சம்பளப் படிநிலைக்கு ஒத்திருக்குமிடத்து, அவர் கிட்டிய உயர்ந்த படிநிலையில் வைக்கப்படல் வேண்டும்.

இ) பதவி உயர்வின்மீது, உத்தியோகத்தர் கடைசியாகப் பெற்ற சம்பளமானது, புதிய சம்பள அளவுத்திட்டத்தின் மீதான ஆரம்பச் சம்பளத்திலும் ஒரு சம்பள ஏற்றத்தினால் (உயர்த்தப்பட்ட பதவியின் சம்பள ஏற்றப் பெறுமதி) அல்லது அதனிலும் கூடுதலான ஏற்றங்களின் எண்ணிக்கையினால் குறையுமிடத்து புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளப் படிமுறையில் அவர் வைக்கப்படல் வேண்டும்.

ஈ) பதவி உயர்வின்போது உத்தியோகத்தர் கடைசியாகப் பெற்ற சம்பளமானது, புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளத்திலும் பார்க்கக் குறைவடைவது, ஒரு சம்பள ஏற்றப் பெறுமதிக்கு (உயர்த்தப்பட்ட பதவிக்குரிய சம்பள ஏற்றப் பெறுமதி) குறைவானதாயின், அவரை புதிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்பச் சம்பளப் படிநிலையில் வைத்து மேலதிக சம்பள ஏற்றம் ஒன்று அவருக்கு வழங்கப்படல் வேண்டும்.

உ) அவரது எதிர்கால சம்பள ஏற்றத் திகதி பதவி உயர்வு அமுலுக்கு வந்த திகதியாகும்.

உத்தியோகத்தரொருவரின் சம்பளத் திருத்தமும், பதவியுயர்வும் ஒரே திகதியில் அமையுமிடத்து, வழங்கப்படும் தீர்வு யாது? 

அத்தகைய உத்தியோகத்தர் ஒருவரின் பதவியுயர்வின் மீதான சம்பள மாற்றம் தொடர்பில் பழைய சம்பள அளவுத் திட்டத்தின் மீது அல்லது புதிய சம்பள அளவுத் திட்டத்தின் மீது ஆகிய இரண்டில் செய்யப்படும் மாற்றங்கள் உத்தியோகத்தருக்கு கூடுதல் அனுகூலம் மிக்க முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.