DO III Past Paper

Wednesday, September 1, 2021

அரச அலுவலர்கள் தங்களது சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தல் Disclosure of assets and liabilities Q&A 7



தங்களது சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தல்

ஒரு உத்தியோகத்தரின் காணி கொள்ளல் (Land Purchase), முதலீடு செய்தல் (Invest), ஈடு வைத்தல் (Mortgage) சம்பந்தமான கடிதங்கள் அல்லது கடிதங்களின் பிரதிகள் கோவைப்படுத்த வேண்டிய கோப்பின் பெயர் என்ன?

 

உத்தியோகத்தரின் பெயர் வழிப் பதிவுக் கோப்பிலோ அல்லது அக்கோப்பு பேணப்படவில்லையாயின் அவரின் பெயர் வழிக்கோப்பிலோ கோவைப்படுத்தப்படல் வேண்டும்.

 

மாவட்ட செயலாளர்கள் தங்களது, காணி கொள்ளல், முதலீடு செய்தல், ஈடு வைத்தல் தொடர்பான எந்தவொரு விண்ணப்பத்தையும் தாபன விதிக்கோவை அத்தியாயம் XXIX இன்படி யாருக்கு அனுப்ப வேண்டும்?

 

உரிய அமைச்சின் செயலாளருக்கு 

 

அரச அலுவலர்கள் தங்களது காணி கொள்ளல், முதலீடு செய்தல், ஈடு வைத்தல் தொடர்பிலான கடிதங்கள் மற்றும் அதன் பிரதிகள் யாருக்கு அனுப்புதல் வேண்டும்?

 

அ) அத்தகைய அனைத்துக் கடிதங்களினதும் பிரதிகள் இணைந்த சேவையொன்றின் உத்தியோகத்தரொருவர் தொடர்பாயின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் (Director General of Combined Services), ஏனையோர் தொடர்பாயின் செயலாளருக்கும் அனுப்பப்படல் வேண்டும்.

 

ஆ) செயலாளரொருவரினாலும் எந்தவோர் அமைச்சின் கீழும் சேர்க்கப்படாத திணைக்களமொன்றின் தலைவரொருவரினாலும் காணி கொள்ளல் முதலிய நடவடிக்கைகளோடு தொடர்புடைய எழுத்தாவணங்கள் அரசாங்க நிருவாக அமைச்சின் செயலாளருக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

தாபன விதிக்கோவை அத்தியாயம் XXIX இன்படி காணி கொள்ளல், முதலீடு செய்தல், ஈடு வைத்தல் சம்பந்தமான விடயங்கள் எவ்வகையான அலுவலர்களுக்கு ஏற்புடையாகாது?

 

அமயத் தொழிலாளியொருவருக்கு ஏற்புடையதாகாது.

 

அரச அலுவலர்கள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தல் (Disclosure of assets and liabilities) தொடர்பில் தனது திணைக்களத் தலைவருக்கு வழங்க வேண்டிய தகவல்களை குறிப்பிடுக.

 

ஒவ்வோர் உத்தியோகத்தரும் அரசாங்க சேவைக்கு முதல் நியமிப்புப் பெறும் போது 

 

அ) தனக்குச் சொந்தமான அல்லது 

ஆ) தனது வாழ்க்கைத் துணைக்கு உரிமையிலுள்ள அல்லது 

இ) திருமணத்தால் அவரது பெயருக்கு எழுதப்பட்டுள்ள அல்லது 

ஈ) உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள 

உ) விவாகமானதன் பின்னர் தங்களது பெயரில் புதிய உரிமையொன்றை அல்லது சொத்தொன்றைக் கொள்கின்ற போது,

 

சொத்துக்கள் தொடர்பாகவும் தன்னால் அல்லது தனது வாழ்க்கைத் துணையால் வகிக்கப்படுகின்ற அனைத்து பொறுப்புக்கள் தொடர்பாகவும் தனது பெயர்வழிப் பதிவுக் கோப்பில் அல்லது பெயர் வழிக்கோப்பில் உட்சேர்க்கப்படுவதற்கு தனது திணைக்களத் தலைவருக்கு வழங்குதல் வேண்டும்.

அலுவலர்கள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தல் தொடர்பான தகவல்களை திணைக்களத் தலைவருக்கு வழங்கும் படிவம் யாது?

 

(திருத்தப்பட்ட) பொதுப்படிவம் 261 இல் எழுதிக் கையளித்தல் வேண்டும்.

 

கொள்வனவு மூலமாக, குத்தகை மூலமாக, வெகுமதியாக, பின்னுரிமையாக, சீதனமாக அல்லது மரண சாசனத்தின் மூலமாக உரித்தாகின்ற காணியின் கொள்ளல் தொடர்பாக யாருக்கு அறிவித்தல் வேண்டும்? 

 

திணைக்களத் தலைவரூடாக காணி அமைந்துள்ள மாவட்டத்தின் அரசாங்க அதிபருக்கு மூன்று மாத காலப் பகுதிக்குள் அறிவித்தல் வேண்டும்.

 

அரசாங்க அலுவலர் ஒருவரின் காணி கொள்வனவானது தேவையற்றதென அரசாங்க அதிபர் கருதினால் அது தொடர்பில் யாருக்கு அறிவித்தல் வேண்டும்?

 

தேவையானவாறு நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்க அதிபர் அதுபற்றி உத்தியோகத்தர் கடமைபுரிகின்ற அமைச்சின் செயலாளருக்கு ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.

 

இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தரொருவரினால் செய்யப்பட்ட காணி கொள்ளல்கள் Land Purchase பற்றிய சகல அறிக்கைகளும் யாருக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்?

 

அவர்கள் பணியாற்றுகின்ற அமைச்சின் செயலாளர்களுக்கு கட்டளைகளைப் பிறப்பிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

எவரேனுமோர் உத்தியோகத்தரால் காணியொன்று கொள்ளப்படல் அல்லது உடைமையில் வைத்திருக்கப்படல் தகாதென்று அவ்வமைச்சின் செயலாளர் கருதினால் செயலாளரால் எடுக்கக்கூடிய நடவடிக்கையை குறிப்பிடுக.

அ) உத்தியோகத்தரால் தான் தகுதியென்று கருதுகின்ற அளவுக்கு அக்காணி தொடர்பான தன் உரிமைகளைக் களைய வேண்டுமென்று அவ்வுத்தியோகத்தருக்கு கட்டளை இட செயலாளருக்கு முடியும்.

 

ஆ) ஏதேனுமொரு காணியைக் கொள்வனவு செய்தல் அல்லது காணியை உடைமையாக வைத்திருத்தல் உத்தியோகத்தர் ஒருவரின் சொந்த நலனுக்கும் அரச கருமக் கடமைகளுக்கும் தாக்கமொன்றை ஏற்படுத்தக் கூடியதாயிருப்பின் அத்தகைய காணி கொள்ளல் அல்லது உடைமை பொருத்தமற்றதாகும்.

 

அரசாங்க அலுவலர் ஒருவரின் காணி உரிமை என்பது தாபன விதிக்கோவை XXIX ஆம் அத்தியாயத்தின்படி எவ்வாறான விடயங்களை உள்ளடக்கும்?

 

அ) உத்தியோகத்தரொருவர் தன்பேரில் அல்லது 

ஆ) தன் குடும்பத்திலுள்ள வேறொருவரின் பேரில் அல்லது

இ) தனது வாழ்க்கைத் துணையினால் அல்லது 

ஈ) தனது வாழ்க்கைத் துணை சார்பில் அவரின் பிரத்தியேக சொத்தொன்றாக கொள்ளப்படுகின்ற 

காணிகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கும். 

 

உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு உரிமையுள்ள பங்குகள், சொத்துக்கள் அல்லது உரிமைகள் தன் வசம் இருத்தல் அல்லது கொள்வனவு செய்ய நினைத்திருத்தல் தனது கடமைகளுக்கும் தனிப்பட்ட நலன்களுக்கும் இடையில் முரண்பாடொன்று உருவாக்கும் என தெரியவருமிடத்து, அவரால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.

 

அ) அவர் தனது திணைக்களத் தலைவரூடாக அவ்வமைச்சின் செயலாளருக்கு அவ்விடயத்துடன் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் அறிவித்தல்,

 

ஆ) செயலாளரிடமிருந்து தேவையான கட்டளைகள் அல்லது பணிப்புரைகள் வரும்வரை அவ்விடயத்தின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்தல் வேண்டும். 

 

இ) அக்கட்டளைகள் கிடைக்கப் பெற்றவுடன் அவர் அதற்கேற்ப நடவடிக்கையெடுத்தல் வேண்டும்.

 

தாபன விதிக்கோவை XXIXம் பிரிவின் கீழ் தனக்குச் சமர்ப்பிக்கப்பட்ட எவ்விடயம் பற்றியும் இடப்படவேண்டிய கட்டளைப்பற்றி செயலாளருக்கு சந்தேகமேற்படுமிடத்து அவர் யாரிடம் உசாவுதல் வேண்டும்?

 

செயலாளர் அது தொடர்பாக பொது நிருவாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரை உசாவுதல் செய்ய வேண்டும்.