DO III Past Paper

Saturday, September 11, 2021

பிரசவ லீவு வினாவிடைகள் Maternity leave - E Code Question and Answer Series 24



எவ்வாறான சேவைகளில் உள்ள பெண் உத்தியோகத்தர்களுக்கு பிரசவ லீவு வழங்கப்படும்? 

நிரந்தர, தற்காலிக, அமய அல்லது பயிலுநர் பெண் உத்தியோகத்தர்களுக்கு பிரசவ விடுமுறை பெறும் உரித்துண்டு. 

 

சம்பளத்துடனான பிரசவ லீவுகளின் கால அளவினை குறிப்பிடுக? 

அ) பெண் உத்தியோகத்தரொருவருக்கு ஒவ்வோர் உயிர் பிறப்புக்குமாக 84 அரசாங்க அலுவலக நாட்களுக்கு லீவு பெறுவதற்கு உரித்துண்டு. 

ஆ) பிரசவம் நிகழ்ந்து 04 வாரங்கள் செல்ல முனனர் உத்தியோகத்தர் மீண்டும் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படமாட்டார். 

இ) பிரசவ லீவுகளை கணிப்பீடு செய்யும் போது அந்த லீவுக் காலத்திற்குள் வருகின்ற அரசாங்க விடுமுறைகள் மற்றும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தினங்களை அதில் உள்ளடக்கலாகாது.

ஈ) இந்த லீவுக் காலம் உத்தியோகத்தரின் எஞ்சியுள்ள லீவுகளிலிருந்து கழிக்கப்பட மாட்டாது. இந்த லீவுக் காலத்தை முழுச்சம்பளத்துடனான ஒரு லீவாகக் கருதுதல் வேண்டும். 

உ) பிறக்கும் போதே மரணம் நிகழ்கின்ற ஒரு பிள்ளைப் பிறப்பிலும் பிரசவத்திலிருந்து 6 வாரங்கள் செல்ல முன்னர் குழந்தை மரணிக்கின்ற சந்தர்ப்பத்திலும் விசேட சம்பளத்துடனான லீவாக பிள்ளைப் பிறப்பு நிகழ்ந்த திகதி முதல் 6 வார கால லீவொன்று வழங்கப்படல் வேண்டும். 

ஊ) பிரசவ லீவினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரைச் சம்பளத்துடனான 84 நாள் லீவொன்று பெற்றுக் கொள்ள முடியும்.

எ) அரைச் சம்பளத்துடனான லீவுக் காலத்திற்குள் வருகின்ற அரசாங்க விடுமுறைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்கள் அரைச் சம்பள லீவுகளாகக் கருதப்படும்.

ஏ) அங்கீகரிக்கப்பட்ட லீவுகள் முடிந்ததன் பின்னர் தொடர்ந்தும் குழந்தையைப் பராமரிக்கின்ற அவசியம் ஏற்படின் மாத்திரமே சம்பளமற்ற 84 நாள் லீவை பெற்றுக் கொள்ள முடியும்.

ஏ) இந்த லீவுகளை கணக்கிடும் போதும் அரசாங்க விடுமுறைகள் மற்றும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தினங்களை அதில் உள்ளடக்குதல் வேண்டும்.

ஒரு பெண் உத்தியோகத்தருக்கு பிரசவத்திற்கு முந்திய காலப்பகுதியில் வழங்கப்படும் விடுமுறை கால அளவினை குறிப்பிடுக?

உத்தியோகத்தரொருவரின் கர்ப்பிணிக் காலம் 5 மாதங்களாகும் போது கடமைக்காக அரை மணித்தியாலம் தாமதமாகி சேவைக்கு வருகை தரவும் வழமையாக சேவை முடிந்து புறப்படும் நேரத்திற்கு அரை மணித்தியாலத்திற்கு முன் புறப்படவும் அனுமதி வழங்கப்படுகிறது. இச்சலுகை வழங்கப்படுவது அலுவலர் பிரசவ விடுமுறை பெறும்வரை மாத்திரமேயாகும்.

 

பிரசவம் காரணமாக வழங்கப்படும் தந்தைக்குரிய விடுமுறை கால அளவினை குறிப்பிடுக.

அ) அரசாங்கத்தின் நிரந்தர, தற்காலிக, அமய அல்லது பயிலுநர் உத்தியோகத்தரொருவரின் மனைவியின் பிள்ளைப் பிறப்பு நிகழ்வொன்றிற்காக 03 அலுவலக நாட்களைக் கொண்ட விசேட லீவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆ) இந்த லீவைப் பிள்ளைப் பிறப்பில் இருந்து 03 மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். 

 

ஏனைய விடயங்கள்

 

வினைத்திறன்காண் தடைப் பரீட்சையொன்று ஒன்றிற்குத் தோற்றுவதற்குள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு, வழங்கப்படும் விடுமுறை தொடர்பான ஏற்பாடுகளை குறிப்பிடுக.

அ) அப்பரீட்சைக்கு முதல் முறையாகத் தோற்றுவதாயின் மாத்திரம் குறிப்பிட்ட பரீட்சைக் காலப் பகுதிக்காக கடமை லீவினைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆ) பயணச் செலவினை மீள்நிரப்புச் செய்வதற்கோ அல்லது யாதேனுமோர் இணைந்த கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்வதற்கோ அவருக்கு உரித்துக் கிடையாது. 

இ) இவ்விடுமுறை குறித்த பரீட்சைக்காக ஒரு தடவை மாத்திரமே வழங்கப்படும்.

 

கட்டாய லீவு வழங்கப்படுவதற்கான காரணங்களை குறிப்பிடுக?

 

அ) எவரேனுமோர் உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆற்றுவது பொது நன்மைக்கு ஒத்துவராதென மருத்துவ அல்லது வேறு யாதேனுமொரு விசேட காரணத்தினால் கருதப்படுமிடத்து, நியமன அதிகாரி தனிப்பட்ட முறையில் அந்த உத்தியோகத்தரை கட்டாய லீவில் அனுப்ப முடியும்.

ஆ) அந்த லீவினை குறித்த உத்தியோகத்தரின் எஞ்சிய லீவுகள் இருப்பின் அவற்றிலிருந்து கழித்துக்கொள்ளல் வேண்டும். 

இ) உத்தியோகத்தரின் எஞ்சிய லீவுகள் முடிவடைந்ததன் பின்னர் வழங்கப்படுகின்ற லீவினை முழுச் சம்பளத்துடனான லீவொன்றாகக் கணக்கெடுத்தல் வேண்டும்.

 

ஒரு அலுவலருக்கு அரைச் சம்பள லீவு காலப் பகுதியைத் தொடர்ந்து சம்பளத்துடனான ஒய்வு லீவு வழங்கப்பட முடியுமா?

வழங்க முடியாது. எனினும், முழுச் சம்பளத்துடனான ஓய்வு லீவுக் காலப்பகுதியைத் தொடர்ந்து அரைச் சம்பள ஓய்வு லீவை வழங்க முடியும். 

ஒரு அலுவலருக்கு வழங்கப்பட்ட அரைச் சம்பள லீவுகள் தொடர்பான தகவல்களை திணைக்களத்தலைவர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு மாதாந்தம் அறிக்கையிட வேண்டிய படிவம் யாது?

பொது 96 படிவம் 

இணைந்த சேவை உத்தியோகத்தர்கள் தொடர்பில் அவ்வாறானதொரு அறிக்கை பொது நிருவாக அமைச்சின் செயலாளருக்கோ அல்லது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கோ சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அனுப்பப்படுதல் வேண்டும்.

 

சுற்றுநிருபம் 11/2013 இற்கமைய அரச அலுவலர் ஒருவரின் திருமணமாகாத பிள்ளை ஒன்று அல்லது வாழ்க்கைத்துணை சுகயீனமுற்றதன் அடிப்படையில் அலுவருக்கு வழங்கக்கூடிய விடுமுறையினை குறிப்பிடுக? 

 

அ) அரச வைத்தியசாலை ஒன்றின் வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கமைய மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக ஆகக்கூடியது ஒரு வருடம் வரை சம்பளமற்ற விடுமுறையினை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் கழிப்பதற்காக வழங்கமுடியும்.

ஆ) தாய் மற்றும் தந்தை இருவருமே அரச அலுவலர்களாயின் நோயுற்ற பிள்ளையினைப் பராமரிப்பதற்காக இருவரில் ஒரு அலுவலருக்கு மாத்திரமே விடுமுறையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உத்தியோகத்தர் ஒருவர் நான்கு (04) வருடகால சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்கின்ற வரை நாட்டிற்கு வெளியே கழிப்பதற்காக அவருக்கு லீவு வழங்குவதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக.

 

அ) பொதுவாக லீவு வழங்கப்பட மாட்டாது.

ஆ) அவ்வாறே உத்தியோகத்தர் ஒருவருக்கு வெளிநாட்டில் கழிப்பதற்காக மீண்டும் நீண்டகால லீவொன்றினை அனுமதிப்பதாயின், அவர் அதற்கு முன்னர் வெளிநாட்டிலே லீவொன்றினைப் பூர்த்திசெய்து மீண்டும் நாட்டுக்கு திரும்பிய திகதியிலிருந்து நான்கு வருடங்கள் கழிந்திருத்தல் வேண்டும்.

இ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைக் காலத்திலும் குறைந்த காலம் சேவை செய்துள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு சுகவீனமொன்றிற்காகவோ அல்லது வேறேதேனும் அவசர தனிப்பட்ட காரணமொன்றிற்காகவோ அத்தகைய லீவினை வழங்க முடியும்.

ஈ) சுகவீனமொன்று தொடர்பாயின், குறித்த உத்தியோகத்தரின் சுகநிலை மற்றும் வெளிநாடு ஒன்றில் அதற்கான சிகிச்சையினைப் பெற்றுக் கொள்வதற்கான தேவைப்பாடு என்பன அரச மருத்துவ அதிகாரி ஒருவராலோ அல்லது லீவை அனுமதிக்கின்ற அதிகாரியினால் வேண்டப்படுமிடத்து மருத்துவ சபை ஒன்றினாலோ உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

உ) அவசர தனிப்பட்ட காரணங்களுக்காக அத்தகைய லீவிற்காக விண்ணப்பிக்கின்ற உத்தியோகத்தர் ஒருவர், அக்காரணங்களைத் தனது திணைக்களத் தலைவரினூடாக லீவைப் பெற்றுக் கொடுக்கும் அதிகாரிக்கு (தான் விரும்பின் இரகசியமான முறையில்) விபரித்தல் வேண்டும்.

வெளிநாடு செல்லும் உத்தியோகத்தரின் விடுமுறையானது எத்தினத்தில் இருந்து கணக்கிடப்படும்?

அ) தனது பதவிக்குரிய கடமைகளை ஒப்படைத்து நான்கு நாட்களுக்கு மேல் கடந்திருக்காவிடின், குறித்த உத்தியோகத்தர் தீவிலிருந்து வெளியேறிய திகதி முதல் லீவு ஆரம்பிக்கும். 

ஆ) எனினும், தீவிலிருந்து வெளியேறும் தினத்தன்றும் உத்தியோகத்தர் பணியாற்றியிருப்பின் குறித்த லீவானது அதற்கு அடுத்த நாளில் இருந்தே ஆரம்பிக்கும்.

 

வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர் ஒருவர் நி.பி. 269 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தனது சம்பளத்தை வழங்குவது தொடர்பில் ஒவ்வொரு மாத இறுதியிலும் தனது திணைக்களத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டிய  ஆவணங்களை குறிப்பிடுக.

உத்தியோகத்தர் உயிருடன் வாழ்வதாக பொறுப்பு வாய்ந்த நபர் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட “வாழ்வுச் சான்றிதழ்” மற்றும் கொடுப்பனவிற்காக முத்திரையொன்றின் மீது கைச்சாத்திடப்பட்ட பற்றுச்சீட்டொன்று.