DO III Past Paper

Saturday, September 18, 2021

Salary Increment சம்பள ஏற்றம் வினாவிடைகள் 30



அரசாங்கப் பதவியொன்றில் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் முன்னர் பதவி வகித்துள்ள உத்தியோகத்தர் ஒருவர், மீண்டும் அரசாங்கப் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுமிடத்து, அவர் முன்னர் வகித்த பதவி சார்பாக சம்பள ஏற்ற (Salary Increment) நன்மைகளை வழங்க முடியாத காலப்பகுதிகளை குறிப்பிடுக. 

அ) அவர் நியமிக்கப்பட்டுள்ள புதிய பதவிக்காக விதிக்கப்பட்டுள்ள தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆற்றப்பட்ட முந்திய சேவைக்குரிய எந்ததொரு காலப்பகுதி சார்பாகவும்,

ஆ) வினைத்திறனற்ற காரணத்தினால் ஓய்வுபெறச் செய்தல், சேவையிலிருந்து கேட்டு விலகுதல், தகுதிகாண் நியமனமொன்றை முடிவுறுத்தல், பதவியை விட்டுச் செல்லல், பதவி நீக்கம் செய்தல் அல்லது வேலையோ நடத்தையோ திருப்திகரமானதாகக் காணப்படாமையினால் சேவையினை முடிவுறுத்தல் போன்ற இவ்வாறான சம்பவமொன்றிற்கான காலப் பகுதிகள் சார்பாக –

இ) திருப்திகரமற்றதென அறிவிக்கப்பட்டுள்ள யாதேனும் காலக்கெடு  சார்பாக,

ஈ) யாதேனுமொரு சேவைக் காலப்பகுதியின் பின்னர் அந்தச் சேவைக் காலப் பகுதியை விடவும் நீண்ட காலப்பகுதியொன்றினால் சேவையானது இடையில் முறிப்பட்டிருப்பின் அவ்வாறான காலப்பகுதி சார்பாக,

உ) ஆறுமாதத்திற்கு குறைந்த யாதேனுமொரு காலப்பகுதி சார்பாக,

ஊ) உத்தியோகத்தர் நியமனம் பெற்றுள்ள புதிய பதவியொன்றை விடவும் குறைந்த தரத்தைக் கொண்ட பதவியொன்றில் பதவி வகித்துள்ள யாதேனுமொரு காலப்பகுதி சார்பாக,

எ) உத்தியோகத்தர் நியமனம் பெற்றுள்ள புதிய பதவிக்கென அப்போது காணப்பட்ட சம்பள அளவுத் திட்டத்தின் (Salary Scale) ஆரம்ப சம்பளத்தை விடவும் குறைந்த சம்பளம் பெற்று பணியாற்றியுள்ள யாதேனுமொரு காலப்பகுதி சார்பாக,

உத்தியோகத்தர் ஒருவர் சேவைமுறிவின்றி ஒரு பதவியில் இருந்து மற்றொரு பதவிக்கு மாறிச் செல்லும்போது, அவருக்கு சம்பள ஏற்ற நன்மையினை வழங்கக்கூடிய நிபந்தனைகளை குறிப்பிடுக.

அ) முன்னர் வகித்த பதவியின் சம்பள அளவுத் திட்டமானது அவர் நியமிக்கப்பட்டுள்ள புதிய பதவியின் சம்பள அளவுத் திட்டத்தினை (salary Scale) விடவும் கூடுதலாக அல்லது சமநிலையில் காணப்படாதவிடத்து முன்னர் வகித்த பதவியில் பின்வரும் காலப் பகுதிகளுக்காக அவருக்கு சம்பள ஏற்ற நன்மையினை வழங்க முடியும்.

1) புதிய பதவியின் ஆரம்பச் சம்பளத்தை (Basic Salary) விடவும் கூடுதலான நிலையான சம்பளம் ஒன்றைப் பெற்று சேவையாற்றியுள்ள காலப் பகுதிகளுக்காக,

2) புதிய பதவியின் ஆரம்பச் சம்பளம் அல்லது ஆரம்பச் சம்பளத்தை விடவும் கூடுதலான சம்பளப் படிமுறைக்குரிய சம்பளம் ஒன்றினைப் பெற்று சேவையாற்றியுள்ள காலப் பகுதிக்காக.

நியமனம் பெற்றுள்ள பதவிக்கு சம்பளம் வழங்குதல் தொடர்பில் எவ்வாறான விடயங்களைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்? 

அ) எந்தவோர் உத்தியோகத்தருக்கும் அவர் நியமனம் பெற்றுள்ள பதவியின் ஆரம்ப சம்பளத்தை விடவும் குறைந்த சம்பளம் ஒன்றினை வழங்கலாகாது.

ஆ) எந்தவோர் உத்தியோகத்தருக்கும் அவர் நியமனம் பெற்றுள்ள பதவிக்குரிய உச்ச சம்பளத்தை விடவும் கூடுதலான சம்பளமொன்றை வழங்கலாகாது.

ஒரு உத்தியோகத்தர் சம்பள ஏற்றம் ஒன்றினை எவ்வாறு உழைத்துக் கொள்ள முடியும்? 

தனது கடமைகளை வினைத்திறனோடும் சோம்பலின்றியும் நிறைவேற்றுவதன் மூலமும் மற்றும் சம்பள ஏற்றக் காலப் பகுதியினுள் முழுமையாகப் பணியாற்றுவதன் மூலமும் குறித்த உத்தியோகத்தர் அந்தச் சம்பள ஏற்றத்தினை (salary increment) உழைத்துக் கொள்ளல் வேண்டும். 

சம்பள ஏற்றம் வழங்குவதற்கான நிபந்தனைகளை குறிப்பிடுக.

அ) சம்பள ஏற்றம் ஒன்றினை வழங்குவதற்கு முன்னர் உத்தியோகத்தரால் அதனை உழைத்துக் கொள்வதற்குத் தேவையான விடயங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்று தகைமை வாய்ந்த அதிகாரி கைச்சாத்திடுதல் வேண்டும். 

ஆ) சம்பள ஏற்றம் ஒன்றினை வழங்க வேண்டியது முழுமையான சம்பள ஏற்றக் (Salary Increment Period) காலப்பகுதியிலும் பணியாற்றியிருந்தால் மாத்திரமேயாகும். 

இ) பூரண சம்பளத்துடன் அல்லது அரைச் சம்பளத்துடன் இருந்த எந்த லீவுக் காலப் பகுதியாயினும் சம்பள ஏற்றம் வழங்கப்படுவது தொடர்பான சேவைக் காலமாகக் கணிப்பிடப்படும்.

ஈ) உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பில் அவ்வாறானதொரு சான்றிதழை வழங்க முடியாதவிடத்து, அவருக்குரிய சம்பள ஏற்றத்தை வழங்குவது மறுக்கப்படும். 

உ) சம்பள ஏற்றத்தை “தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தல்”, “குறைத்தல்”, “நிறுத்துதல்”, “பிற்போடல்” போன்ற முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் அம்மறுதலிப்பை மேற்கொள்ள முடியும்.

“சம்பள ஏற்றமொன்றை தற்காலிகமாக இடைநிறுத்தல்” என்பதன் மூலம் கருதப்படுவது யாது? 

குறித்த காலப்பகுதி ஒன்றினுள் சம்பள ஏற்றத்தினை வழங்காது நிறுத்திவைத்து அந்தக் காலப்பகுதியின் இறுதியில், குறித்த சம்பள ஏற்ற தினத்திலிருந்து (Salary Increment Date) அந்த உத்தியோகத்தருக்கு அதனை வழங்குவதாகும்.

தற்காலிக இடைநிறுத்தம் என்பதால் கருதப்படுவதென்ன?

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடந்த ஆண்டிற்கான சம்பள ஏற்றத்தினை இடைநிறுத்துவதாகவும் அமைதல் கூடும். அல்லது கிடைக்கப்பெறவுள்ள சம்பள ஏற்றம் ஒன்றினை இடைநிறுத்தம் செய்தலாகவும் அமையலாம்.

“சம்பள ஏற்றமொன்றினை நிறுத்துதல்” என்பதன் மூலம் கருதப்படுவது யாது?

உரிய காலப் பகுதியினுள் சம்பள ஏற்றத்தினைப் பெற்றுக் கொடுக்காது அக் காலப்பகுதியின் இறுதியில், அதற்கான அனுமதி கிடைக்கப்பெறுமிடத்து அதனை நிறுத்தியிருந்த காலப்பகுதிக்கு நிலுவை வழங்காது குறித்த சம்பள ஏற்றத்தினை அனுமதித்த திகதியிலிருந்து வழங்குவதாகும்.

“சம்பள ஏற்றமொன்றைக் குறைத்தல்” என்பதன் மூலம் கருதப்படுவது யாது?  

வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சம்பள ஏற்றமொன்றையன்றி ஏற்கனவே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சம்பள ஏற்றம் ஒன்றினைக் குறைப்பதாகும்.

சம்பள ஏற்றம் நிறுத்துதல் எச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும்? 

இது குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தவறுகளின் போதும், பிற்போடல் அளவுக்கு மீறிய பாரதூரமான தண்டனையொன்றாகக் கருதப்படுகின்ற பொதுவான வினைத்திறனின்மை தொடர்பான சந்தர்ப்பத்திலுமாகும்.

 

சம்பள ஏற்றம் குறைத்தல் எச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும்? 

இது சம்பள ஏற்றத்தை நிறுத்தும் தீர்மானம் ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைக்கு வராத சந்தர்ப்பங்களிலாகும்.

சம்பள ஏற்றம் பிற்போடல் எச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும்?  

அ) இது உத்தியோகத்தர் ஒருவரின் கடந்த சம்பள ஏற்றத் திகதியிலிருந்து அவர் மேற்கொண்டுவருகின்ற பணிகளின் அளவு மற்றும் தரமும், நடத்தையும் அவருக்குரிய சம்பள ஏற்ற நிலையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் ஆற்றப்பட வேண்டியதிலும் பார்க்க சராசரியாக குறைந்த மட்டத்தைக் கொண்டதும் வேதன ஏற்றத்தை நிறுத்துதல் போதியதல்லவெனக் கருதப்படக்கூடியதுமான சந்தர்ப்பங்களிலாகும்.

ஆ) உத்தியோகத்தர் ஒருவர் வினைத்திறன்காண் தடைப் பரீட்சை ஒன்றில் சித்தியடையத் தவறுமிடத்தோ அல்லது உரிய தினத்தன்று பதவியில் நிரந்தரமாக்கப்படுவதற்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்யாதவிடத்தோ சம்பள ஏற்றத்தைப் பிற்போடுதல் வேண்டும்.

சம்பள ஏற்றத்தை நிறுத்துதல், குறைத்தல் மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்துதல் போன்ற கட்டளைகளைப் பிறப்பிக்க கூடிய நிபந்தனைகளை குறிப்பிடுக.

அ) 01ம் மாதத்திலிருந்து 12ம் மாதம் வரையிலான எம்மாதங்களுக்காகவும் சம்பள ஏற்றத்தை நிறுத்துதல், குறைத்தல் மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்துதல் போன்ற கட்டளைகளைப் பிறப்பிக்க முடியும்.

ஆ) எனினும் அவ்வாறு மேற்கொள்கையில் ஏதேனும் ஒரு தடவையில் அது வலுவாக்கம் செய்யப்படும் காலப்பகுதி, 12 மாத காலத்தை விஞ்சக் கூடாதென்பதோடு, இக்காலப் பகுதியானது குறித்த உத்தியோகத்தரின் அடுத்து வரும் சம்பள ஏற்றத் திகதியைத் தாண்டவும் கூடாது. 

இ) சம்பளத்தை பிற்போடல் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்படுமிடத்து அக்கட்டளையானது ஒரு தடவையில் 06 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு மாத்திரமே பிறப்பிக்கப்படல் வேண்டும்.