DO III Past Paper

Friday, January 20, 2023

அரசாங்க உத்தியோகத்தர்கள் வியாபாரமொன்றில் ஈடுபடலாமா? வினாவிடைகள் 6



வேறு வகையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலன்றி அரசாங்கம் அதன் உத்தியோகத்தர்களின் சம்பளத்தினை எந்த ஊகத்தின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளது?


உத்தியோகத்தர்களின் நேரம், அறிவு, ஆற்றல், திறமை, தேர்ச்சி என்பவற்றின் மீது அரசாங்கம் பூரண உரிமையைக் கொண்டுள்ளதன் காரணமாக அவர்களின் ஊதியம் இந்த ஊகத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தக முயற்சி ஒன்றில் ஈடுபடலாமா?


தாபன விதிக்கோவை அத்தியாயம் XXX இன் படி எந்தவோர் உத்தியோகத்தரும் வர்த்தக முயற்சியொன்றில் அல்லது வியாபாரமொன்றில் எவ்வகையிலான தொழில் முயற்சியிலும் ஈடுபடுகின்ற நிறுவனத்தினதும் அலுவல்களில் பங்குபற்றுதலாகாது.


உத்தியோகத்தரொருவர், உள்ளூராட்சி நிறுவனமொன்றிற்கு அல்லது அரசாங்கக் கூட்டுத்தாபனமொன்றிற்கு அல்லது பிற பொது நிறுவனமொன்றிற்கு அல்லது ஏதேனும் தனியார் தரப்பொன்றிற்கு எந்தவொரு சேவையையும் ஆற்றுவதற்கு யாரின் அங்கீகாரத்தினை பெற வேண்டும்?


அ) செயலாளரின் அங்கீகாரத்தினை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளல் வேண்டும்.


ஆ) அத்தகைய சேவையொன்றை ஆற்றுவதற்கு இணங்க உத்தியோகத்தரொருவருக்கு அங்கீகாரமளிக்கப்படுவது :


1) வேறு வழியில் பெற்றுக் கொள்ள முடியாத விசேட அறிவொன்று அல்லது தேர்ச்சியொன்று உத்தியோகத்தரிடமுள்ளவிடத்து அல்லது 


2) உள்ளூராட்சி நிறுவனமொன்றின் வேலைகளுடன் பயன்தரு முறையில் இணைக்கத்தக்க அரசாங்க வேலைகளில் அவர் ஈடுபட்டிருக்கின்றவிடத்து: அல்லது 


3) உள்ளுராட்சி நிறுவனத்தின் பணியாளர்களுக்கில்லாதளவிற்கு ஆற்றலொன்று தேவைப்படுகின்ற ஏதேனுமொரு பதவியின் வெற்றிடமொன்றிற்கு அவ்வுத்தியோகத்தரை தற்காலிகமாக நியமிக்க வேண்டிய அவசியமேற்படுமிடத்து மாத்திரமேயாகும்.


உத்தியோகத்தரொருவர் தனது வழமையான அலுவலகக் கடமைகளுக்குப் புறம்பான பணியொன்றை கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு ஆற்ற முன்னர், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை குறிப்பிடுக.


அ) முதலில் செயலாளரின் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.


ஆ) அப்பணியை ஆற்றிக் கொள்வதற்காக வேறோரு வழியில்லையென காரணத்துடன் நிரூபிக்க வேண்டும்.


இ) அவ்வாறு அனுமதி வழங்கப்படுமிடத்து, உத்தியோகத்தருக்குக் கிடைக்கின்ற கட்டணத்தில் X ஆம் அத்தியாயத்தின் 3 ஆம் பிரிவிற்கிணங்கவும் தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது அறிவுறுத்தல்களுக்கமையவும் செயலாளர் தீர்மானிக்கின்ற ஒரு குறித்த சத வீதம் திரட்டு நிதிவரவுக் கணக்கில் வைக்கப்படும்; மீதி உத்தியோகத்தருக்கு வழங்கப்படும்.


ஈ) லீவில் உள்ள எந்தவோர் உத்தியோகத்தரும் செயலாளரின் அனுமதியை முன்கூட்டியே பெறாமல் எந்தவொரு சம்பளம் பெறற்குரிய பணியையும் ஏற்கக் கூடாது.


உ) நிர்வாக சபையொன்றினால் நிருவகிக்கப்படுகின்ற ஏதேனுமொரு கம்பனியிடமிருந்தோ அல்லது நிதியத்திடமிருந்தோ, கொடையொன்றை, சன்மானமொன்றை, கட்டணமொன்றை, ஊக்குவிப்புத் தொகையொன்றை அல்லது வெகுமதியொன்றை பெறுவதாயின் செயலாளரின் முன்னங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.


எ) செயலாளரின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தாலன்றி உத்தியோகத்தரொருவர் பாடசாலையொன்றின் முகாமையாளராகப் பதவி வகித்தற்கு அனுமதிக்கப்பட மாட்டார்.


ஏ) ஆதன மதிப்பீட்டாளரொருவராக நியமனம் செய்யப்படுவதற்கு அரசாங்க சேவையைச் சாராத நிபுணத்துவம் வாய்ந்த ஆளொருவரைக் கண்டறிவது சாத்தியமில்லை எனில் அதற்காக அரசாங்க உத்தியோகத்தரொருவரை பரிந்துரை செய்யலாம்.


ஐ) அத்தகைய நியமனமொன்றிற்கு அரசாங்க சேவையிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரை பரிந்தரை செய்தால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான விஷேட காரணங்களும் குறிக்கப்படல் வேண்டும்.


ஒ) உத்தியோகத்தர் எவரும் தனது அரசாங்கக் கடமைச் செயற்பாடு தொடர்பில் உள்ள எத்தகைய விடயம் தொடர்பாகவும் தனியார் முகவராண்மையொன்றை ஏற்றலாகாது.


தனது கண்டுபிடிப்பு சார்பில் இலங்கையிலோ பிற நாட்டிலோ ஆக்கவுரிமை பெற விரும்புகின்ற எத்தகைய உத்தியோகத்தரொருவராயினும் அதற்கான விண்ணப்பத்தினை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்?


அ) அதற்கான விண்ணப்பமொன்றை ஏற்புடைய அதிகாரிக்கு அனுப்புதல் வேண்டும். 


ஆ) அவ்விண்ணப்பத்தின் பிரதி ஒன்றினைத் தனது திணைக்களத் தலைவர் மூலம் செயலாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.


இ) அமைச்சின் செயலாளர், ஆக்கவுரிமை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு விண்ணப்பம் தொடர்பான பரிந்துரையை வழங்குதல் வேண்டும். 


ஈ) ஆக்கவுரிமை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர், மதியுரைக் குழுவினைக் கலந்தாலோசித்துக் கண்டுபிடிப்புப் பற்றியும் அதன் சாத்தியப்பாடுகள் பற்றியும் ஆராய்ந்த பின்னர், ஆக்கவுரிமையை கோருகின்ற உத்தியோகத்தருக்கு அளிக்கத்தகு உரிமைகள் பற்றியும் அவர்மீது விதித்தற்குரிய நிபந்தனைகள் பற்றியும் முடிவு செய்தல் வேண்டும்.


உ) இந்த முடிவு விண்ணப்பத்தின் பிரதி கிடைத்த இரு மாதங்களுக்குள் உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்படும்.


ஊ) செயலாளரின் முடிவு கிடைக்கப்பெறும்வரை, விண்ணப்பதாரரின் கண்டுபிடிப்பு சம்பந்தமான உரிமைகள் யாவும் அரசாங்கத்துக்கே சொந்தமானவையாகக் கருதப்படும். 


உத்தியோகத்தர் ஒருவரின் கண்டுபிடிப்பு முழுமையாக அவரது உடைமையாக கொள்ளக்கூடிய நிபந்தனைகளை குறிப்பிடுக? 


1) உத்தியோகத்தரின் புதிய கண்டுபிடிப்பு, முழுமையாக அவரது தொழிலோடு அல்லது அலுவலகக் கடமைகளோடு தொடர்புறாது வேறுபட்ட தன்மையில் அமைந்ததெனில், கண்டுபிடிப்புச் சார்பான கட்டுப்பாட்டு உரிமைகள் அனைத்தையும் முழுமையாக உடைமை கொள்ள உத்தியோகத்தர் அனுமதிக்கப்படுவார்.


2) முழுக் கட்டுப்பாட்டு உரிமை அனுமதிக்கப்பட்டுள்ளவிடத்து, ஆக்கவுரிமை பெறுவது சம்பந்தமான செலவுகள் அனைத்தையும் உத்தியோகத்தரே பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும்.


3) ஏதேனும் வர்த்தகப் பயன்பாடொன்று அதன் மூலம் கிடைக்கப்பெறுமாயின், அதன் ஒரு பகுதி அரசுக்குரித்தாகின்ற நிபந்தனை


ஆக்கவுரிமையானது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிடுக? 


எவ்வகையான கட்டுப்பாட்டுரிமையும் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படுவதில்லையெனத் தீர்மானிக்கப்படுமிடத்து, உத்தியோகத்தர், புதிய கண்டுபிடிப்பு தொடர்பான அனைத்து உரிமைகளையும் அதன் அனுகூலங்களையும் முறையாக எழுதிக் கையொப்பமிட்ட ஆவணமொன்றின் மூலம் அரசாங்கத்தின் சார்பில் கடமையாற்றுகின்ற செயலாளருக்கு கையளித்துவிடல் வேண்டும்.