DO III Past Paper

Friday, January 20, 2023

The right to comment கருத்து வெளியீட்டு உரிமை வினாவிடைகள் 5



தாபன விதிக்கோவை XXXII ஆம் அத்தியாயத்தின் படி அரசியல் உரிமைகளைப் (Political Right) பிரயோகிக்க உரித்தில்லாத உத்தியோகத்தரொருவருக்கு  உறுப்புரிமை பெற முடியாத சங்கங்களை குறிப்பிடுக? 

 

அ) அரசியல் சங்கமொன்றில் அல்லது 

ஆ) வரிப்பணம் செலுத்துவோர் சங்கமொன்றில் அல்லது 

இ) வரியிறுப்போர் சங்கமொன்றில் அல்லது 

ஈ) அதுபோன்ற வேறு சங்கமொன்றில் 

  

உறுப்புரிமை பெறுதல் விலக்கப்பட்டுள்ளது. 

 

பொலீஸ்படையிலும் சிறைச்சாலையிலும் பணிபுரிகின்ற உத்தியோகத்தரொருவர் தவிர்ந்த அரசியல் உரிமைகளைப் பிரயோகிக்க உரித்தில்லாத உத்தியோகத்தரொருவர் சங்கமொன்றினை உருவாக்குதல் தொடர்பான ஏற்பாட்டினை குறிப்பிடுக.


இவ்வாறான உத்தியோகத்தர்கள் அரசியல் நோக்கங்கள் அற்றதும், எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது அமைப்புடனோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பற்றதுமான சங்கங்களை அரசாங்கத்தின் விசேட அங்கீகாரமொன்றைப் பெறாமல் உருவாக்கிக் கொள்ள முடியும். 

 

அரசியல் உரிமைகளைப் பிரயோகிக்க உரித்தில்லாத உத்தியோகத்தர்களினால் உருவாக்கப்பட்ட உத்தியோகத்தர் சங்கமொன்று தனது உத்தியோகத்தர்கள் சார்பாக அரசாங்கத்திடம் முறைப்பாடுகள் செய்யும் உரித்தை எவ்வாறு பெற முடியும்?

 

தொழிற்சங்கப் பதிவாளரினால் (138ஆம் அத்தியாயமான) தொழில் சங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும். 

 

எவ்வாறான தொழிற் சங்கங்களில் அரசாங்க உத்தியோகத்தரொருவர் உறுப்பினராக முடியாது? 

 

அ) அரசாங்க உத்தியோகத்தரொருவரல்லாத ஒரு நபருக்கும் உறுப்பினராவதற்கு அனுமதியுள்ளதும், தொழிற்சங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதுமான எத்தொழிற்சங்கத்திலும் உறுப்பினராதல் அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு விலக்கப்பட்டுள்ளது.


ஆ) 1970 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க தொழிற் சங்கங்கள் (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட தொழிற்சங்கக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவேயன்றி வேறு வகையில் அரசாங்க உத்தியோகத்தரல்லாத எவரும், உத்தியோகத்தர்களின் எந்நிறுவனத்தினதும் போசகராக அல்லது ஒரு பதவி தாங்குனராக நியமிக்கப்படவோ அல்லது அங்கத்தவராக அங்கீகரிக்கப்படவோ கூடாது. 

 

சங்கங்கள் ஊடாக அரசாங்கத்திடம் விடயங்களை முன்வைத்தல் தொடர்பில் தாபன விதிக்கோவையின் XXXI ஆம் அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை குறிப்பிடுக.

 

1) ஒரே திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய விதத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களால் நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சங்கமொன்று எவரேனும் ஓர் அதிகாரியிடம் விடயங்களை முன்வைக்க விரும்புமாயின், அச்சங்கம் அவ்வதிகாரியிடம் நேரடியாக விடயங்களை முன்வைக்கலாம். 

 

2) அவ்வாறு செய்கின்ற போது அதன் பிரதியொன்று திணைக்களத் தலைவருக்கும் செயலாளருக்கும் அனுப்பப்படல் வேண்டும். 

 

3) சங்க உறுப்பினர்கள் ஒரே அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்களாகவிருப்பின் அவ்வமைச்சின் செயலாளருக்கு ஒரு பிரதி அனுப்பப்படல் வேண்டும்.

 

4) சங்கம், ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுக்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பின் அப்பிரதி அனுப்பப்பட வேண்டியது, பொது நிருவாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கேயாகும்.

 

5) சங்கத்தில் உறுப்பாண்மை வகிக்கின்ற அனைவரும் இணைந்த சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாயின், அப்பிரதியானது பொது நிருவாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படல் வேண்டும்.

 

6) அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் நியமனம், இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு (Appointment, Transfer, Dismiss, Disciplinary action)  ஆகியவை தொடர்பான எவ்வாவணமும் சங்கமொன்றினால் அதிகாரபீடமொன்றிற்கு அனுப்பப்படலாகாது.

 

XXXII ஆம் அத்தியாயத்திற்கமைய அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்தற்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு அரசாங்கக் கொள்கைகள் அல்லது நிருவாக நடவடிக்கைகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்க முடியுமா?

 

அ) இவ்வாறான அரசாங்க உத்தியோகத்தர் தனது பதவிநிலையிலிருந்து நடவடிக்கை எடுக்க அதிகாரமளிக்கப்பட்டிருந்தாலேயொழிய  அரசாங்கத்தின் எந்நடவடிக்கை பற்றியும் கருத்தில் கொள்ளப்படுவதற்கான கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுப்பதோ, அதில் முக்கிய பங்குவகிப்பதோ தடையாகும்.

 

ஆ) அத்தகைய அரசாங்க உத்தியோகத்தரொருவர் செய்திப் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதியோ அல்லது நிருபர்களுக்குப் பேட்டிகளை அளித்தோ அரசாங்கத்தை அல்லது அரசாங்கத் திணைக்களமொன்றை விமர்சிப்பதற்கோ அல்லது கடமை சார்ந்த அல்லது கடமை சாராத மனக்குறைகளை (உதாரணமாக, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்குப் போதிய ஆளணியின்மை தொடர்பான விமர்சனங்கள் அல்லது முறைப்பாடுகள், மேலதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமை தொடர்பாக திறைசேரிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் ஆதியனவற்றை) பகிரங்கப்படுத்துவதற்கோ செய்திப்பத்திரிகை ஊடகத்தைப் பயன்படுத்தக் கூடாது.

 

இ) எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனுமொரு சங்கத்தினைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்கு உரிமை இருப்பினும் இல்லாவிடினும் அச்சங்கத்தின் அங்கத்தினர்களின் வேதனத்தை அல்லது சேவை நிபந்தனைகளைப் பாதிக்கத் தக்க எந்தவோர் அரச கொள்கைக்கோ அல்லது தீர்மானத்திற்கோ எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது அவற்றை விமர்சிக்கவோ முடியும். 

 

ஈ) எனினும்,அத்தகைய ஆட்சேபனைகள் அல்லது விமர்சனங்கள் ஒன்றில் குறித்த சங்கத்தின் மனக்குறையொன்றை நிவர்த்தி செய்தலை அல்லது சங்கத்தின் சட்ட ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலை நோக்கமாகக் கொண்டதாகவிருத்தல் வேண்டும்.

 

உ) அத்தகைய ஆட்சேபனைகள் அல்லது விமர்சனங்கள் நடுநிலையானதும் இகழ்ச்சித்தன்மையற்றதுமான மொழிப்பிரயோகத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். இரகசியத் தகவல்கள் எவற்றையும் அது வெளிப்படுத்தக் கூடாது.


ஊ) ஓர் அரசாங்க உத்தியோகத்தருக்கு எந்தவோர் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது செயல்முறை பற்றிய தனது ஆட்சேபனையை அல்லது கண்டனத்தை வெளிப்படுத்த முடியும். எனினும்,அத்தகைய ஆட்சேபனைகளை அல்லது விமர்சனங்களை, பகிரங்கமாகத் தெரிவிக்காமலிருக்கவும் அவை பகிரங்கப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் உரிய உத்தியோகத்தர் ஆவன செய்தல் வேண்டும். 

 

 

எ) அவ்வாறே அத்தகைய ஆட்சேபனைகள் அல்லது விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டியது, உரிய ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அல்லது செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தரால் அல்லது அவ்வுத்தியோகத்தர் சட்ட முறையான உறுப்பினராகவுள்ள அரச உத்தியோகத்தர்களின் சங்கமொன்றில் பதவிவகிக்கின்ற ஒருவரால் மாத்திரமேயாகும்.

 

எனினும், எந்தவோர் ஒழுக்காற்று விடயத்தின் மீதும் அமைச்சரவையினால் தனக்களிக்கப்பட்ட அதிகாரத்தைப் பிரயோகிக்கின்ற ஒழுக்காற்று அதிகாரி, அவ்விடயம் பற்றி அது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருடனோ அல்லது அவர் சார்பில் முறைப்பாடு செய்கின்ற எந்தச் சங்கத்துடனோ கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ளும் கடப்பாடுடையவராக மாட்டார்.